தெற்கு தொகுதி பிரச்சினைகள் ஆட்சியரிடம் பட்டியலிட்டு மனு வழங்கிய வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பட்டியலிட்டு மனுவாக மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதி, அதில், தங்கள் தொகுதிகளில் உள்ள முக்கிய பத்து பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியர்களிடம் மனுவாக அளிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்து இருந்தார்.

அதனை ஏற்று கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, தனது தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்த மனுவை வழங்கினார்.

அவர் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள பிரச்சனைகள்:

1) கோவை தெற்கு தொகுதி முழுவதும் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக சேதம் அடைந்துள்ளது.
அனைத்து சாலைகளையும் உடனடியாக சரி செய்து போக்குவரத்துக்கு உகந்த தார் சாலையாக மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

2) ஸ்மார்ட் சிட்டி திட்டதிற்குட்பட்ட பணிகளை விரைந்து முடிக்கப்பட வேண்டும்.

3) பெரிய கடை வீதி, ராஜவீதி ரங்கே கவுண்டர் வீதி மற்றும் ஒப்பணக்கார வீதியின் ஒருங்கிணைந்த மல்டி லெவல் பார்க்கிங் வசதி அவசியம் வேண்டியுள்ளது. டி.கே மார்க்கெட்டின் உட்கட்டமைப்பு மற்றும் மல்டி லெவல் பார்க்கிங் வசதியுடன் மேம்படுத்த வேண்டும்.

4) உக்கடம் பகுதியில் பிரதான தொழிலாக தங்க நகை பட்டறைகள் உள்ளதால் அவர்களின் மேம்பாட்டுக்காக ஒருங்கிணைந்த தொழில் வளாகம் மற்றும் குடியிருப்பு வசதி செய்யப்பட வேண்டும்.

5) கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவு படுத்த வேண்டும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கலாம்.

6) உலகத்தரம் வாய்ந்த பல்லுயிர் தாவரவியல் பூங்கா நகரின் மையப் பகுதியில் உள்ள சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட வேண்டும்.

7) நேரு ஸ்டேடியம் உலகத்தரம் வாய்ந்த அரங்கமாக உருவாக்கப்பட வேண்டும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பெயரில் கோயம்புத்தூர் விளையாட்டு அகாடமி நிறுவப்பட வேண்டும்.

8) ராம்நகர் பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட வேண்டும்.

9) சாய்பாபா காலனி அண்ணா தினசரி மார்க்கெட் இருக்கும் இடத்தில் சேரும் சகதியுமாக உள்ளது. அங்கே துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. மார்க்கெட் முழுவதும் தரைத்தளம் அமைத்து குளிர்சாதன
வசதியுடன் நவீனமயமாக்க வேண்டும்.

10) சேத்துமா வாய்க்காலில் மின் மயானம் அமைத்து தரப்பட வேண்டும்.

11) 80,81 வது வார்டு பகுதிகள், இராமநாதபுரம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் அதை சார்ந்த பகுதி மற்றும் ராம் நகர், தெப்பக்குளம் மைதானம் சுற்றியுள்ள தியாகராய புது வீதி 1,2,3,4 மற்றும் லிங்கப்பா சந்து பகுதிகளில் கழிவு நீர் தேங்காமல் இருக்க சாக்கடைகள் தூர்வாரப்பட்டு, மிக நீண்ட காலத்திற்கு முன் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள குழாய்களை மாற்றி பெரிய குழாய்களை பதித்து சீரமைக்கப்பட வேண்டும். மேலும் லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்ற தானியங்கி மோட்டார்கள் பொருத்தப்பட வேண்டும்.

12) ராஜவீதி, சலிவன் வீதி பகுதியில் உள்ள வேணுகோபால சுவாமி தெப்பக்குளம் கோயிலில் உள்ள தனியார் கார் பார்க்கிங்கை அகற்றிவிட்டு அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஆன்மீக சொற்பொழிவு கூடம் அமைத்து தர வேண்டும்.

13) வெரைட்டி ஹால் ரோடு சி.எம்.சி காலனியில் இருக்கும் தற்காலிக குடியிருப்பு பகுதியில் தகுந்த அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

14) சுங்கம் காந்திநகர், அம்மன் குளம், ஹைவேஸ் காலனி, செல்வபுரம் ரோடு செட்டி வீதி பகுதி மற்றும் சேத்துமா வாய்க்கால் பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்

என தனது தொகுதியில் உள்ள 14 முக்கிய பிரச்சினைகளை பட்டியலிட்டு வானதி சீனிவாசன் வழங்கினார்.