டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தமிழகம் முன் மாதிரியாக உள்ளது – அமைச்சர் மனோ தங்கராஜ்

இந்துஸ்தான் கல்லூரியில் ஹேக்கத்தான் போட்டி

கோவை இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற மென்பொருள் தொடர்பான ஹேக்கத்தான் போட்டியை தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவின் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 மென்பொருள் தொடர்பான ஹேக்கத்தான் இறுதிப் போட்டி கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள இந்துஸ்தான் தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள நோடல் மைய அரங்கில் நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில், இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் தலைமை தாங்கினார். நிர்வாக செயலாளர் பிரியா சதீஷ் பிரபு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் நடராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக தமிழக தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஹேக்கத்தான் போட்டியை துவக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர், அனைத்து தொழில் துறையிலும் தகவல் தொழில் நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் காகிதம் இல்லா பட்ஜெட், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான தகவல் பரிமாற்றம் போன்ற செயல்பாடுகளில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தியதில் தமிழகம் இந்தியாவிலேயே முன் மாதிரி மாநிலமாக இருப்பதாக தெரிவித்தார்.

தகவல் தொழில் நுட்பத்தில் தமிழக இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து வருவதாக கூறிய அவர், குறிப்பாக மருத்துவம், விவசாயம், கல்வி போன்ற துறைகளில் தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப திறன் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தின் கடை கோடி கிராமத்திற்கும் இணைய வசதியை மேம்படுத்துவதே தமிழக அரசின் குறிக்கோள் என குறிப்பிட்டார்.

மென்பொருள் தொடர்பான ஹேக்கத்தான் போட்டியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை காட்சிபடுத்தியிருந்தனர்.