கே.பி.ஆர் கல்லூரியில் ஹேக்கத்தான் போட்டி

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’ மென்பொருள் பிரிவுக்கான இறுதி போட்டிகளுக்கான தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் புதுப்படைப்பாக்கப் பிரிவு நாடு முழுவதும் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 என்ற கல்லூரி மாணவர்களுக்கான தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் போட்டிகளை ஏற்பாடு செய்திருக்கிறது.

அரசாங்கம், அமைச்சகங்கள், பல்வேறு துறைகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களின் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு தளத்தை உருவாக்கி அதற்கு மாணவர்கள் தீர்வுகளை கண்டுபிடிக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் உள்ளது.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் கடந்த 2017 முதல் இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது ஒன்று மென்பொருள் ஹேக்கத்தான் மற்றொன்று வன்பொருள் ஹேக்கத்தான் ஆகும். மேலும் இந்த வருடம் முதல் இது பள்ளி மாணவர்களுக்கும், பிரச்சனைகளை தீர்வு காணும் மனப்பான்மை வளர்க்கும் விதமாக பள்ளிகளுக்கு இடையிலும் இந்த போட்டியாகவும் நடத்தப்படுகிறது.

அமைச்சகங்கள், பல்வேறு துறைகள், பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் என மொத்தம் 62 நிறுவனங்கள் 476 பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக மத்திய அரசால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

புதுப்படைப்பாக்கப் பிரிவு மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் நாடு முழுவதும் இருந்து 75 உயர் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து அவற்றை இந்த போட்டிகள் நடத்தும் நோடல் மையங்களாக அறிவித்துள்ளது.

கோவையில் நடைபெறும் மென்பொருள் ஸ்மார்ட் இந்தியன் ஹேக்கத்தான் இறுதிப் போட்டிக்கு, கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நோடல் மையமாக செயல்படுகிறது. இங்கு நடைபெறும் போட்டியில் 22 குழுக்கள் 163 மாணவர்கள் கலந்துகொண்டு 6 வகையான தொழில்நுட்ப சிக்கல்கள் அல்லது பிரச்சனைகளுக்கு அறிக்கைகளை நிறுவனங்கள் வழங்கியுள்ளது.

இதில் ஒவ்வொரு சிக்கலுக்கும் தீர்வு கண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சமும், இரண்டாம் பரிசாக ரூபாய் 75,000ம், மூன்றாம் பரிசாக ரூபாய் 50,000ம் வழங்கப்படும் .

கே.பி.ஆர்.பொறியில் கல்லூரியில் நடைபெறும் இறுதிப் போட்டிகள் தொடக்க விழாவிற்கு கே.பி.ஆர். குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி வழிகாட்டுதலில், கல்லூரின் முதல்வர் அகிலா தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை ப்ளோ லிங்க் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி நித்தியானந்தன் தேவராஜ், கே.பி.ஆர். கல்லூரிக்கான நோடல் மைய தலைவராக புனே எல் & டி இன்போடெக் நிறுவனத்தின் டேட்டா சயின்ஸ் முதல்வர் பிரதாப் சனாப் கலந்து கொண்டனர்.