சீன உளவு கப்பல் இந்தியாவுக்கு ஆபத்தா?

சமீபகாலமாக இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் சர்வதேச அளவில் காட்சிகள் வெகுவாக மாறி வருகின்றன. ஒரு காலத்தில் வல்லரசுகளாக இருந்த பெரிய நாடுகள் இன்று வேறு நிலையில் இருக்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா இடையே ஒரு காலத்தில் பனிப்போர் இருந்தது. இன்று அது வேறு வடிவத்தில் உள்ளது. தற்போது, ஒருபுறம் ரஷ்யா, உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. மறுபுறம் அமெரிக்காவின் துணையுடன் தைவான் ராணுவ ஒத்திகை நடத்துகிறது. இதனை கண்டித்து சீனா கடுமையாக மிரட்டல் விடுக்கிறது. இன்னொரு புறம் கொரோனா தாக்குதலில் இருந்து உலகில் பல நாடுகள் மீண்டு வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் முழுமையாக அந்த பெருந்தொற்று ஒழிந்து விட்டது என்று சொல்ல முடியாது.

இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே இருந்தது போலவே, இப்பொழுது இந்தியா, சீனா எல்லை சிக்கல்கள் மெல்ல உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இருந்த சிக்கல்கள் இருந்தாலும், பொருளாதார உறவுகளும் இருந்து வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் பொருளாதாரம் சீனாவுக்கு நெருடலாக உள்ளது என கூறப்படுகிறது. இந்த சூழலில்தான் தற்போது நமது இந்தியக் கடலில் உள்ள இலங்கையில் சீன நாட்டின் உரிமை பெற்ற அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வந்து சீன கப்பல் நங்கூரமிட்டு நிற்கிறது.

சீனாவின் ஜியான்ஜின் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு நேராக இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இந்த கப்பல் வந்து இருக்கிறது. இதை சாதாரணமான, வழக்கமான ஒரு பயணம் என்று சீனா சொன்னாலும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. அந்த கப்பல் இருந்த இடத்தில் இருந்துகொண்டே சுமார் 700 கிலோ மீட்டர் வரை பார்வையிடக் கூடியதாகும். குறிப்பாக விண்ணியல் ஆய்வு நடத்தக் கூடிய ஆய்வக வசதி கொண்ட கப்பல். இந்தியாவின் பார்வையில் இந்த சீன கப்பலில் இருந்து தென்னிந்தியா முழுமையும் கவனித்து தகவல் திரட்ட முடியும். ஆனால் வழக்கம் போல சீனா இதை மறுக்கிறது.

சீனாவின் கப்பல் எவ்வாறு இந்த இந்தியப்பெருங்கடல் பகுதிக்குள் நுழைய முடிந்தது?  இதற்கு யார் முன்னுரிமை அளித்தார்கள், அனுமதி அளித்தார்கள் என்று பார்த்தால் இந்தியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள நாடான, இந்தியாவுடன் பல நூற்றாண்டுகள் தொடர்புள்ள இலங்கை நாடுதான் இந்த சிக்கலுக்கு காரணமாக இருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இலங்கை அரசாங்கம் தவித்து வருகின்றது. தனது தவறான பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக முன்பே அம்பாந்தோட்டை துறைமுகத்தை 1.5 பில்லியன் டாலர் கடன் உதவிக்காக சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த துறைமுகத்தை கையிலெடுத்து சீனா மேம்பாட்டு பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது. அந்தத் துறைமுகத்தில் தான் இப்பொழுது கப்பல் வந்து நங்கூரம் பாய்ச்சி இருக்கிறது.

அந்த சீன உளவு கப்பல் இங்கு வர அனுமதிக்கக்கூடாது என்று இந்திய அரசு இலங்கை அரசிடம் ஏற்கனவே கேட்டுக்கொண்டது. சிறிது தாமதம் செய்தாலும் ஒரு கட்டத்தில் கப்பல் இங்கு வர இலங்கை அரசு அனுமதி அளித்துவிட்டது. சீனக் கப்பல் வந்து இப்பொழுது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருக்கிறது. இலங்கை அரசு என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு விழிக்கிறது. இரு நாடுகளிடமும் உறவும் வேண்டும், உதவியும் வேண்டும். ஆனால் சீனா புதிய உறவுக்கார நாடு. அதன் ராஜதந்திர முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்த கப்பலை இங்கே கொண்டு வந்து இருக்கிறது. இது கண்டிப்பாக இந்தியாவுக்கு ஒரு வகையான அச்சுறுத்தல் தான்.

முதலில் சில நாட்கள் அமைதி காத்த இந்திய வெளியுறவுத்துறை இப்பொழுது நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறி இருக்கிறது. சீனாவின் கொள்கைகள், பொருளாதார பலம், செயல்பாடுகள் வேறு;  இந்தியாவின் கொள்கைகள், பொருளாதாரம், செயல்பாடுகள் வேறு. என்றாலும் இலங்கை போன்ற நாடுகளில் முன்பிருந்த ஆட்சியாளர்கள் போன்ற தலைவர்கள் எடுக்கும் பொறுப்பற்ற முடிவுகள் எவ்வாறு ஒரு பிராந்தியத்தில் பல நாடுகள் இடையே அமைதியின்மையை உருவாக்க முடியும் என்பதற்கு இந்த சிக்கல் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

ஒரு நாட்டின் அடிப்படையான கடமை தனது இறையாண்மையை பாதுகாத்து, தன்னுடைய நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக கவனம் செலுத்துவதாகும். அந்த வகையில் பார்த்தால் அத்தகைய பணியைச் செய்யத் தவறிய நாடாக இலங்கை தோன்றுகிறது. தேவையற்ற ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டு தனது கவனத்தையும், கருத்தையும், ஆற்றலையும் செலுத்த வேண்டிய இடத்தில் இந்தியா உள்ளது. லடாக்கில் ஓரளவு சிக்கல் தீர்ந்து அமைதி திரும்பியது போல இங்கும் சிக்கல் தீரட்டும்! சீனாவின் கப்பல் வெளியே கிளம்பட்டும்! அமைதி திரும்பட்டும்!