கோவையில் வரும் 12 ஆம் தேதி முதல் மாலை நேர உழவர் சந்தை

தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை என 37 மாலை நேர உழவர் சந்தைகள் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளன. இதனை வரும் 12 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

அதன் படி கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரத்தில் இந்த மாலை நேர உழவர் சந்தை செயல்பட உள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் (வணிகம்) சுந்தர வடிவேலு கூறியிருப்பதாவது: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் மாலை நேர உழவர் சந்தை இயங்க உள்ளது. காலை நேர உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்வது போல் மாலை நேர உழவர் சந்தையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் சமையல் எண்ணெய் வகைகள், சிறு தானியங்கள், சாமை, தினை மற்றும் அரிசி வகைகள் போன்றவைகள் விற்பனை செய்யப்பட உள்ளன. கோவை மாவட்டத்தில் 24 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்ளன. இதில் 12 நிறுவனங்களின் பொருட்கள் முதல் கட்டமாக மாலை நேர உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளன. மளிகை பொருட்கள் வெளியில் உள்ள கடைகளை காட்டிலும் உழவர் சந்தையில் விலை குறைவாக கிடைக்கும் எனக் கூறினார்.

மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் குறிச்சி உழவர் சந்தை

கோவை குறிச்சி பகுதியில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்டது. குறிச்சி உழவர் சந்தையில் 60 கடைகள் உள்ளன. இதில் மதுக்கரை உள்ளிட்ட பகுதியில் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு உழவர்களை கண்டறிந்து டோக்கன் வழங்கியுள்ளனர். அதன் படி 30 கடைகளில் உழவர்கள் முதல் கட்டமாக குறிச்சியில் தங்கள் விற்பனையை துவங்க உள்ளார்கள்.

அதே போல் குறிச்சி உழவர் சந்தையில் பூக்கள் விற்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலர் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் இது தொடர்பாக அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளனர். உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு அதன் பின்பு அங்கு மலர் விவசாயம் மேற்கொள்ள அனுமதிப்பதா? வேண்டாமா? என முடிவு எடுக்கப்படும் என வேளாண்மை துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் ஸ்டாலின் வரும் 23 ம் தேதி கோவை வர உள்ளார். அப்போது குறிச்சி உழவர் சந்தை திறக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுகிறது.