சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று ஆரம்பம்

சென்னையில் இன்று செஸ் போட்டி தொடங்குகிறது. 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறுகிறது.

இந்த தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அகமதாபாத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.20 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். அங்கிருந்து காரில் புறப்பட்டு மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்கிறார். பிரதமர் வந்தடைந்ததும், டெல்லியில் தொடங்கி 75 நகரங்களை கடந்து வந்துள்ள ஒலிம்பியாட் ஜோதியை, மேடைக்கு எடுத்து வரப்படும். அதைத் தொடர்ந்து, போட்டியை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.