ஸ்மார்ட் மீட்டருக்கு மாத கட்டணம் இல்லை – அமைச்சர் செந்தில்பாலாஜி

வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் அதற்கு மாதாந்திர வாடகை கட்டணம் வசூலிக்கப்படாது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூரில் 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒலிம்பியாட் நினைவு மாதிரி ஜோதியை மாணவர்கள் எடுத்துச் செல்ல மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேரணியை தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் அதற்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும் என்று கடந்த 2 நாட்களாக தவறான தகவல் பரவி வருகிறது. வீடுகள், மற்றும் குடிசை வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மாதாந்திர வாடகை கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவித்தார்.

அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ரூ.1.59 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்றுள்ளனர். மின் கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் சமையல் காஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்த்தும் போராட்டம் நடத்தாமல், மின் கட்டண உயர்வை மட்டும் எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் மின் கட்டணம் சீரமைக்கப்பட்டுள்ளது என்றார்.