இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்

இலங்கையின் புதிய பிரதமராக, இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இன்று பதவியேற்றுக்கொண்டார்.

பிரதமராக பதவி ஏற்றுள்ள இவர், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், இலங்கை நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 1983 ஆம் ஆண்டு முதல் இடதுசாரி மகாஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைவராக உள்ளார்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பல்வேறு அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.

இதனையடுத்து புதிய அதிபர் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி பெரமுனா சார்பில் அனுரா குமார திஸ்சநாயகேவும் போட்டியிட்டனர். இதில், இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார்.

கோத்தபய பதவிக்காலமான 2024 வரை ரணில் விக்ரமசிங்கே இலங்கை அதிபராக பதவியில் நீடிப்பார். இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்று கொண்ட ரணில் விக்ரமசிங்கே மூத்த உறுப்பினரான தினேஷ் குணவர்தனாவை பிரதமராக நியமித்தார். அவருக்கு இலங்கை அதிபர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.