மலேசியா பல்கலைக்கழகத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, மலேசியா நாட்டில் ஈப்போ நகரில் உள்ள குவெஸ்ட் சர்வதேச பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

மலேசியா குவெஸ்ட் சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், குவெஸ்ட் சர்வதேச பல்கலைக்கழக துணைவேந்தர் ஸிடா முகமது ஃபாஹ்மி ஆகியோர் கையொப்பமிட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், சர்வதேச அளவிலான கல்விக்காக பேராசிரியர்கள் மற்றும் அறிவியல் மாணவர்கள் பரிமாற்றம், ஒருங்கிணைந்த ஆராய்ச்சிகளுக்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் குவெஸ்ட் சர்வதேச பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளன. மேலும், இரு கல்வி நிறுவனங்களுக்கு இடையே கல்வி, ஆராய்ச்சி பணிகளை தொடருதல், கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தி, ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வு நூல்கள் வெளியிடுதல் உள்ளிட்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில் குவெஸ்ட் சர்வதேச பல்கலைக்கழக முதன்மை செயல் அலுவலர் நிக்கோலஸ் கோஹ், வணிகம் மற்றும் மேலாண்மைப் புல டீன் அப்துல் ரஹீம் முஹமது யூசுப், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் அகிலா, குவெஸ்ட் சர்வதேச பல்கலைக்கழகப் பேராசிரியர் தனராஜ் கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏற்கெனவே மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.