தமிழ்நாட்டை ஸ்மார்ட் மாநிலமாக உருவாக்குவதே இலக்கு! – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. இம்மாநாட்டில், 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 74,898 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 22,252 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 17,654 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 21 நிறுவனங்களின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதுதவிர, பணிகள் நிறைவடைந்துள்ள 1,497 கோடி மதிப்பீட்டில் 7,050 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்ககூடிய 12 நிறுவனங்களின் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசுகையில்: தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3 வது இடத்தைப் பிடித்துள்ளது என்ற செய்தி மிகப்பெரிய வரலாற்று சாதனையாக அமைத்திருக்கிறது. 14 வது இடத்தில் இருந்து தமிழ்நாடு 3 வது இடத்தைப் பிடித்துள்ளது. இது திமுக ஆட்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய நற்சான்றிதழ். ஆட்சிக்கு வைத்த ஓராண்டு காலத்திலேயே இத்தகைய இமாலய சாதனையை அடைந்துள்ளோம் என்றார்.

தமிழ்நாடு அரசின் தொழில்துறையை தங்கமாக மாற்றி வரும் அமைச்சர் தங்கம் தென்னரசுவை தான் மனதார பாராட்டுவதாக கூறினார்.

ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 5 மாநாடுகளை நடத்தியுள்ளோம். தற்போது 6 வது மாநாடு நடைபெற்றுள்ளது. ஓராண்டிற்குள் 6 முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியதே மிகப்பெரிய சாதனை. அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அமைதி, நல்லிணக்கம் என்பதை அடிப்படையாக கொண்ட திராவிட மாடல் மாநிலத்தை நோக்கி இந்திய தொழிலதிபர்கள், உலக நிறுவனங்கள் வரத் தொடங்கியதன் அடையாளமாக இந்த மாநாடு நடந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் மீது அபார நம்பிக்கை வைத்து தொழிலதிபர்களும், தொழில் நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள முன் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாநாட்டின் சிறப்பம்சமாக நிதிநுட்ப துறைக்காக பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்றார்.

தமிழ்நாட்டை ஒரு ஸ்மார்ட் மாநிலமாக உருவாக்குவது தான் இந்த அரசின் இலக்கு. தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்திற்கு உயர்த்த வேண்டும். தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும் எனப் பேசினார்.