ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 30 வது பட்டமளிப்பு விழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி தலைமை வகித்தார்.

கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்து, ஆண்டறிக்கை வாசித்தார். விழாவிற்கு மும்பை மஹிந்த்ரா குழும துணைத் தலைவர் மற்றும் தலைமை தணிக்கையாளர் வைத்யநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: இக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றதன் மூலம் உங்களுடைய எதிர்காலத்திற்கு முதலீடு செய்துள்ளீர்கள். உங்களுடைய வாழ்க்கைத் தரம் என்பது உங்களுடைய உழைப்பில் தான் அமைந்துள்ளது. மாற்றம், மாற்றுச் சிந்தனை, மாற்றுப் பார்வை போன்றவையே நிறைய வாய்ப்புகளை உருவாக்கித்தரும். வாய்ப்புகள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் சூழல் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் நிறைய மாறிவிடும். அதற்கேற்ப நாமும் மாற வேண்டும். சரியோ! தவறோ! முடிவு உங்களுடையதுதான். வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் எனக் கூறினார்.

இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.