நேற்று வரை மீன் பிடிக்க தடை: இன்றுடன் மீன் பிடிக்க படை

மீன்பிடி தடைகாலத்திற்கு பிறகு இன்று மீண்டும் ஆயிரக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் 1983ம் ஆண்டு, தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம்14ம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் மாதம் நள்ளிரவு 14ம் தேதி வரை மீன்பிடிதடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 61 நாட்கள் மீன்பிடி தடைகாலத்திற்கு பிறகு, இன்றுடன் மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து, நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு மாலை அணிவித்து சூடம் ஏற்றி பூஜை செய்து, தங்கள் குலதெய்வங்களை வேண்டி தொழிலுக்கு புறப்பட்டனர்.

நாகை மாவட்டத்தில் கல்லார், கீச்சான்குப்பம், அக்கரைப் பேட்டை,  நாகூர், வேதாரண்யம், செருதூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நாகை துறைமுகத்தில் இருந்து கடுவையாற்றின் வழியாக ஏராளமான விசைப்படகுகளை  அணிவகுத்து கடலுக்குள்  மீனவர்கள் செல்கின்றனர். ஒரே நேரத்தில் ஏராளமான படகுகள் கடலில் சென்றதை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

தமிழக அரசு, தற்போது படகு ஒன்றுக்கு மானிய விலையில் 1800 லிட்டர் டீசல் வழங்கி வரும் நிலையில், கடலில் படகில் தொழில் செய்வதால் டீசலுக்கு உரிய சாலை வரியை ரத்து செய்து, தொழில் செய்ய தேவைப்படும் டீசலை மானிய விலையில் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறால், நண்டு, கணவாய், வஞ்சரை, வாவல் உள்ளிட்ட மீன்களுக்கு உரிய விலை கிடைக்க ஏற்றுமதியாளர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.