‘அக்னிபாத்’ திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு பணி வாய்ப்பு

ஆயுதப்படையில் பணிபரிய இளைஞர்களுக்கு வாய்ப்பு ‘அக்னிபாத்’ என்ற திட்டத்திற்கு பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,  ‘அக்னிபாத்’ என்ற திட்டத்திற்கு அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளது. இந்த திட்டத்தின்படி, ஆயுதப்படைகளில், இளைஞர்கள் பணிபரிய வாய்ப்பு கிடைக்கும். அக்னிபாத் திட்டத்தின்படி, ஆயுதப்படைகளில் இளம் வீரர்கள் படையாக மாறும்.

புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மட்டங்களில் பயிற்சி வழங்கப்படும். பல்வேறு துறைகளில், புதிய திறன்களுடன் வேலைவாய்ப்புகளை இந்த திட்டம் உருவாக்கும் என்று பேசினார். அங்கு  முப்படைகளின் தலைவர்களும் உடன் இருந்தனர்.

இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுள்ள 45 ஆயிரம் பேர், 4 வருடம் ஒப்பந்தம் அடிப்படையில் பணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.  ஆட்கள் தேர்வு அடுத்த 90 நாட்களில் துவங்கும்.  இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். ஆட்கள் தேர்வு ஆன்லைன் முறையில் நடக்கும். ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான கல்வி தகுதியே, அக்னிவீரர்களுக்கும் பொருந்தும்.

4 வருட பணியில் 6 மாதம் பயிற்சி காலம் அடங்கும். இந்த காலகட்டத்தில் மாத சம்பளம் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாயுடன் படிகளும் வழங்கப்படும். மருத்துவ மற்றும் காப்பீடு வசதிகளும் வழங்கப்படும்.  4 வருட பயிற்சிக்கு பிறகு 25 சதவீத வீரர்கள் மட்டும் பணி நீட்டிக்கப்பட்டு, ஆயுதப்படைகளில் 15 ஆண்டுகாலம் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அதிகாரிகள் மட்டத்தில் இல்லாத மற்ற பணிகளில் இருப்பார்கள்.

ஆயுதப்படையில் சேர முடியாதவர்களுக்கு 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி வழங்கப்படும். ஆனால், அவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாது.

மத்திய பட்ஜெட்டில் ரூ.5.2 லட்சம் கோடி ஒதுக்கப்படும் நிலையில், இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ஆண்டு வருமானம் மற்றும் பென்சன் செலவு பாதியாக குறையும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.