இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை

ஐஐடி மும்பை மற்றும் ஏஐசிடிஇ இணைந்து ஏற்பாடு செய்த Mapathon -2022, கருப்பொருள் வரைபடங்களை உருவாக்குவதற்கான போட்டியில் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியைச் சார்ந்த 68 மாணவர்கள் தேசிய அளவில் சாம்பியன்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

ஒரு சமூகத்திற்கான வரைபடங்களின் துல்லியம் மற்றும் பயனை மேம்படுத்தும் புதிய கருவிகள்/ முறைகளை உருவாக்கும் விதமாக இந்திய அரசு மேற்கொண்ட புதிய முயற்சியில் இந்துஸ்தான் மாணவர்கள் தங்களுடைய பங்களிப்பை அளித்துள்ளனர். பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தும் இம்முன்மாதிரி போட்டிகள் ஊக்கமும் உற்சாகமும் அளித்து மாணவர்களின் செயல் திறமையை மேம்படுத்துகிறது.

இப்போட்டியில் சாம்பியன்களாக முதலாம் இடத்தில் கட்டுமானத் துறையை சார்ந்த மாணவர் குழுவும், இரண்டாம் இடத்தில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு துறை சார்ந்த மாணவர் குழுவும், மூன்றாமிடத்தில் அனைத்துத் துறைகளையும் சார்ந்த 15 குழுக்களும் அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளனர்.

தேசிய அளவில் கலந்துகொண்ட 4666 மாணவர்களில், இந்துஸ்தான் கல்லூரியில் இருந்து 263 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 17 குழுக்களாக அனைத்துத் துறைகளையும் சார்ந்த 68 மாணவர்கள் தங்களது நிலைநாட்டியுள்ளனர்.

இப்போட்டியில் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களை, கல்லூரியின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், இணை செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, முதன்மை செயல் அதிகாரி கருணாகரன், கல்லூரி முதல்வர் ஜெயா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பாராட்டினர்.