தினம் ஒரு சிகரெட்… ஆயுளில் ஒரு நாள் குறைப்பு!

எத்தனையோ திறமையானவர்கள் தங்கள் திறமைகள் அனைத்தையும், ஏதோ ஒரு பலவீனத்திற்கு பலி கொடுத்து விட்டுப்போய்விடுகின்றனர்.

நாம் தினமும் தேதியை கிழிக்கும் போது, மே 31 புகையிலை ஒழிப்பு தினமா, என்று வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைக்கறதும், பேஸ் புக்கில்  போஸ்ட் போடறதுமாக  இருப்போம். ஆனால், புகை பிடிப்பதை மட்டும் யாரும் விடுவதில்லை.

இளைஞர்கள் மத்தியில் புகை பிடிப்பது ஒரு பேஷனாகி வருகிறது. ஒவ்வொரு முறை புகை பிடிக்கும் போதும். உங்கள் வாழ்நாளில் இருந்து 1 மணி நேரத்தை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

சிகரெட் புகைப்பது என்பது உடல் மற்றும் மனரீதியான பழக்கம். பலருக்கு சிகரெட் புகைப்பது என்பது ஒரு கட்டாயச் சடங்காகிவிட்டது. என்ன நேர்ந்தாலும் சிகரெட் பிடித்தே தீர வேண்டும் என்ற உணர்வு இருக்கும்.

புகை பிடித்துக் கொண்டிருந்த நபரிடம், சிகரெட்டை ஆடையால் அணைக்கும் படி சொன்னார், ஒரு முதியவர். அதற்கு அவர், என் ஆடையை நெருப்பால் கரியாக்க நான் என்ன பைத்தியமா? என்றார். அந்த முதியவர் அமைதியாக சொன்னார். நண்பரே, உன் ஆடையென்ன, உன் நெஞ்சை விட விலை உயர்ந்ததா? என்று.

உலகளவில் 6 வினாடிக்கு ஒருவர் புகைபிடிப்பதினால், மரணத்தை தழுவுகின்றனர். ஆண்டிற்கு 60 லட்சம் பேர் சிகரெட் உள்ளிட்ட புகையிலை தயாரிப்புகளால் உயிர் இழக்கின்றனர். 2030 ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

10 சிகரெட் பிடிப்பவர், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சு பொருளை உட்கொண்டு வெளியிடுகிறார். புகைபிடிப்பவர்கள் மட்டுமின்றி சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

புகையிலையில் நிகோட்டின் என்ற ரசாயனம் உள்ளது. அந்த ரசாயனத்தை பயன்படுத்துபவர்களை, போதைக்கு அடிமையாக்கிவிடுகிறது. அந்த நிகோட்டினை  பயன்படுத்தும்போது, அதில் உள்ள ரசாயனம்  மிக விரைவாக மூளைக்குச் சென்று விடும். அப்போது இது  நல்லா  இருக்கே, இன்னும் உள் இழுப்போம் என்ற உணர்வை எற்படுத்தும்.

சிகரெட் மட்டும் புகையிலை அல்ல. பொயிலை, பான், மூக்குப்பொடி, பீடி போன்ற பொருட்களும் புகையிலை தான். இந்தியாவில் தான், அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, அனைத்து கிராமங்களிலும், பாட்டி, தாத்தா மற்றும் நடுத்தர வயதினரும், புகையிலையை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த புகையை சுவாசிக்கும், 90 சதவிகிதம் உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு, வாய், உதடு, தொண்டை, குரல் வளையம், உணவுக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம் என உடல் உள் உறுப்புக்களையும் பாதிக்கிறது. எதிர்காலத்தில் இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கும் காரணமாகிவிடும்.

இருபதாம் நூற்றாண்டில் 10 கோடி பேர், புகையிலைப் பழக்கத்தால் மட்டுமே உயிரிழந்திருக்கின்றனர்.  புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கவில்லையென்றால், இந்த நூற்றாண்டில், 30 கோடி பேர் உயிரிழப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 10 லட்சம் பேர் புகையிலைப் பொருட்களால் உயிரிழக்கின்றனர். புகை பிடிப்பது உடலுக்கு கேடு, என்பது தெரிந்தும் பெரும்பாலான மக்கள் புகை பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர்.  புகையிலை  குறித்த எச்சரிக்கைப் படங்களும் வாசகங்களும் புகையிலைப் பழக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும், அதிலிருந்து விடுபடவும் வழி வகுக்கின்றன.

அதாவது, உடல் நலம் குறித்த எச்சரிக்கை வாசகங்களையும் படங்களையும் புகையிலைப் பெட்டியின் மீது அச்சிடுதல் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு உதவுகிறது.

உலக அளவில் தவிர்க்கக்கூடிய மரணங்கள் நிகழக் காரணமாக இருப்பதில் முதல் இடத்தில் இருப்பது புகையிலைப் பொருட்கள்தான். வருகின்ற ஆண்டிலாவது, புகையிலையை முற்றிலும் ஒழித்து புகை இல்லாத உலகத்தை கொண்டு வருவோம். சிகரெட், பீடி உள்ளிட்ட புகை பொருட்களின் விலையை அதிகரித்து, புகையிலையினால் வரும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்பையும் பெருமளவு குறைக்க வழிவகுக்க வேண்டும்.