அரசியல் மாண்பைக் காத்த ஸ்டாலின்!

இந்த முறை தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமரின் வருகை சில புதிய அதிர்வுகளை உருவாக்கி இருக்கிறது.  அடிக்கடி பல்கலைக்கழகங்களில் தமிழக ஆளுநரும், உயர் கல்வி அமைச்சரும் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்து பேசுவதைவிட, சிறப்பாக, நல்ல அரசியல் முதிர்ச்சியுடன் பிரதமரும் தமிழக முதல்வரும் நடந்துகொண்டது பாராட்டுக்குரியது.

இந்தியாவில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் சித்தாந்த ரீதியில் எதிராக இருக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில், சென்னையில் பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.

இதற்கு முன்பு பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சி தெலுங்கானாவில் நடந்தது. அந்த மாநில முதல்வர் அதில் கலந்து கொள்ளவில்லை. பிப்ரவரி மாதத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் தெலுங்கானா முதல்வர் கலந்து கொள்ளவில்லை. அதுபோல வெளிப்படையாக எதுவும் இல்லாமல் சுமூகமாக பிரதமர் மோடியின் பயணத் திட்டம் தமிழகத்தில் நிறைவேறியிருக்கிறது. ஒரே அரங்கில் இரு கட்சி தொண்டர்கள், தனித்தனி ஆரவாரம், தனி கைதட்டல் என்று இருந்த பொழுதும் நிகழ்ச்சி அமைதியாக நடந்தேறியிருக்கிறது.

சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசும்போது வணக்கம் என தமிழில் தொடங்கி பாரதியின் செந்தமிழ் நாடெனும் போதினிலே எனும் பாடலையும் குறிப்பிட்டார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதி இருக்கை உருவாகியிருப்பதை குறிப்பிட்டார். தமிழ்மொழி, மக்கள் கலாச்சாரம் மிகவும் முக்கியம் என்பதோடு தமிழர்கள் பல துறைகளிலும் அளித்துள்ள முக்கிய பங்களிப்பை நினைவுகூர்ந்து பேசினார். தேசிய கல்விக் கொள்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்றார். அவருடைய உரை முழுக்க, முழுக்க தமிழ்நாட்டு மக்களுக்கு, தமிழ் மக்களுக்கு அவர் ஆதரவானவர் என்ற இமேஜை உருவாக்கும்படி இருந்தது. அதில் ஹைலைட் என்னவென்றால் இலங்கைக்கு உணவு, மருந்து வழங்கியதை குறிப்பிட்டதோடு யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்திய  பிரதமர் தான், தான் என்பதையும் சுட்டிக் காட்டியதுதான். இதுதான் மோடி மாடல் என்பது போல இருந்தது அவருடைய உரை.

இருவேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் தமிழக முதல்வரும், இந்திய பிரதமரும் அவரவர் நிலையை சரி என்று மக்களுக்கு உணர்த்துவது போலவும், மெய்ப்பிப்பது போலவும் பேசி நயத்தக்க நாகரீகத்துடன் நடந்து கொண்டது பாராட்டத்தக்கது.

அதற்கு ஈடு கொடுப்பதாக அமைந்து இருந்தது தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் உரை. தமிழகத்தின் சிறப்பு தேவைகளை சிறப்பாக பட்டியலிட்டதோடு தமிழை அலுவல் மொழியாக ஆக்குமாறு கேட்டுக்கொண்டார். உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாகவும் மாற்றும்படி கேட்டுக்கொண்டார். இலங்கை பற்றி பேசும்பொழுது கச்சத்தீவை மீட்க இதுவே மிகச் சரியான தருணம் என்றது சிறப்பு வாய்ந்தது.

மத்திய மாநில அரசுகளின் உறவு பற்றிப் பேசும்பொழுது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் புகழ் பெற்ற வாசகமான “உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்ற வார்த்தைகளை குறிப்பிட்டார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட  வேண்டும் என்ற வேண்டுகோளையும் மறக்காமல் வைத்தார். இந்திய  அரசாங்கத்திற்கு 6% வருவாயை அளிக்கும் தமிழ் நாட்டிற்கு திரும்ப கிடைத்தது 1.1 சதவீதம் என்று குறிப்பிட்டதோடு இது மாற்றப்பட்டு சரி சமமாக பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்றார். மத்திய அரசுக்கு அதிக வருவாய் தருவதோடு நாட்டின் மொத்த உற்பத்தி, ஏற்றுமதியில் பங்களிப்பு என்று தமிழகத்தின் நிலையை பட்டியலிட்டார்.

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று கூறியதோடு மாநிலங்களின் பங்களிப்புக்கு ஏற்ப அவற்றுக்கு வருவாய் அளிக்கப்பட வேண்டும். புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றார். பாதிக்கப்பட்ட வசதி குறைவான மாநிலங்களுக்கு ஒரு நிலைத் தொகையை வைத்து பகிர்ந்து அளித்து கொள்ளலாம்.

ஆனால் வருவாய் தரும் மாநிலங்களுக்கும் தேவையான நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். இருவேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் தமிழக முதல்வரும், இந்திய பிரதமரும் அவரவர் நிலையை சரி என்று மக்களுக்கு உணர்த்துவது போலவும், மெய்ப்பிப்பது போலவும் பேசி நயத்தக்க நாகரீகத்துடன் நடந்து கொண்டது பாராட்டத்தக்கது.