நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ்சின் ஆய்வகம் கோவையில் துவக்கம்

நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் அதிநவீன மருத்துவ ஆய்வகம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

விழாவில், நியூபெர்க் டயக்னஸ்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.கே.வேலு, தலைமை செயல் அலுவலர் ஐஸ்வர்யா வாசுதேவன், தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் தலைமை நுண்ணுயிர் நிபுணர் டாக்டர் சரண்யா நாராயண், திமுக கழக தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோவையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தில், பரிசோதனைக்கு தேவையான அனைத்து கருவிகளும் உள்ளன. நாள் ஒன்றுக்கு 1000 மாதிரிகளை பரிசோதனை செய்ய முடியும். பரிசோதனையின் தன்மையை பொறுத்து தரமான பரிசோதனை முடிவுகள் கிடைக்கும்.

இந்த மருத்துவ பரிசோதனை ஆய்வகம் ஊட்டி, ஈரோடு மற்றும் கோவை உமன் சென்டர் மதர்வுட் ஆகிய இடங்களில் காணொளி காட்சி மூலம்  துவக்கி வைக்கப்பட்டது. விரைவில், பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட 10 இடங்களில் ஆய்வகங்களும், 100 இடங்களில் மாதிரிகள் சேகரிப்பு மையமும் அமைக்கப்படும்.  வீடுகளில் மாதிரிகளை சேகரிக்கவும், பிற சேவைகள் குறித்த விபரங்களுக்கும் 97003 69700 என்ற இலவச அழைப்பிற்கு அழைக்கலாம்.

நியூபெர்க் டயக்னஸ்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு பேசுகையில், இந்த ஆய்வகம், கிருமிகள், நுண்ணுயிரிகள் மற்றும் மூலக்கூறுகளை பரிசோதனை செய்யும் அதிநவீன கருவிகள் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. மருத்துவர்கள் சிகிச்சையை துல்லியமாக மேற்கொள்ளவும், அதற்கேற்ற பாதுகாப்பான சிகிச்சை அளிக்கவும், தரமான வாழ்க்கையை ஏற்படுத்தவும் உயர்தரான பரிசோதனைகள் இந்த ஆய்வகத்தில் உள்ளன.

தரமான பரிசோதனை முடிவுகளுக்கு ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு கோவையில் இந்த மையத்தை துவக்கியுள்ளோம். பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் விரிவாக்கப்பட்ட பல்வேறு புதிய வகை பரிசோதனைகளையும் மேற்கொண்டு பயன்பெறலாம். ஒட்டுமொத்த நல பரிசோதனைகளையும் செய்து கொள்ளலாம் என்றார்.

நியூபெர்க் டயக்னஸ்டிக்ஸ் குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் ஐஸ்வர்யா வாசுதேவன் பேசுகையில், இப்புதிய ஆய்வகத்தால், கோவை மக்களுக்கும் அதை சுற்றியுள்ள நீலகிரி, ஈரோடு, திருப்பூர் பகுதிகளுக்கும் தரமான, அதிநவீன பரிசோதனைகளை வழங்கும் பொறுப்பினை பெற்றுள்ளோம். விரைவில், இப்பகுதிகளில் 10 ஆய்வகங்களும் 100 மாதிரி சேகரிப்பு நிலையங்களையும் உருவாக்கவுள்ளோம். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், இரண்டாம், 3ம் நிலை நகரங்களில் உயர்தர மருத்துவ சேவைகளின் தேவை அதிகமாக உள்ளது. சுகாதார சூழ்நிலையில் உள்ள குறைபாடுள்ள நிலையை மாற்றுவதை நியூபெர்க் ஆய்வகம் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது என்றார்.