ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் வணிக மேலாண்மையியல் மற்றும் வணிகவியல் துறைகளின் சார்பில் “தொழில் மற்றும் மேலாண்மையியலில் புதுமைகள்” என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் சித்ரா தலைமையேற்றுப் பேசும்போது, எதிர்காலத் தலைமுறையினர் புதுமையாகச் சிந்திக்கக் கூடியவர்களாகவும் அதனால் நிறைய தொழில் திட்டங்களை உருவாக்க வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். சமீபத்திய தொழில் வாய்ப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தங்களது தகுதியையும், திறமைகளையும் மாணவ சமுதாயம் மேன்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் வரதராஜன் பங்கேற்றுப் தொழில்நுட்பங்கள் எவ்வாறு வளர்ச்சி பெற்றுள்ளன என்பது குறித்து பேசினார்.

அவர் பேசும்போது, புதிய சிந்தனைகளும், கண்டுபிடிப்புகளும் புதுமைக்கு வழிவகுக்கின்றன. மாணவர்கள் கனவுகளோடு வாழ வேண்டும். நிலையற்ற இந்தத் தொழில்துறையில் நாம் தொடர்ந்து நிலைத்து இருக்க வேண்டுமானால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புதிய தொழில் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கருத்தரங்க சிறப்புமலரை சிறப்பு விருந்தினர் வரதராஜன் மற்றும் கல்லூரி முதல்வர் சித்ரா, வணிக மேலாண்மையியல் துறைத்தலைவர் ஜெயந்தி, வணிகவியல் துறைத்தலைவர் பத்மாவதி ஆகியோர் வெளியிட்டனர்.

தொடக்க அமர்வில் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள ஏசியா பசிபிக் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கப் பல்கலைக்கழக கணக்கியல் மற்றும் நிதி சார் கல்வி நிறுவனத்தைச் சார்ந்த காயத்ரி சுப்பையா கலந்துகொண்டு பேசும்போது, வங்கித்துறையில் பயன்படுத்தப்படும் பிக் டேட்டா அனாலிடிக்ஸ், டேட்டா செக்யூரிட்டி மற்றும் ஃபி;ன் டெக்னாலஜி குறித்து மாணவர்களிடையே விவரித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ரேவதி எக்யூப்மெண்ட் லிமிடெட் நிறுவன இயக்குன காந்திமதிநாதன், மனிதவள மேம்பாட்டுத் துறையில் இருக்கும் சவால்கள் குறித்துப் பேசினார். பணிவாய்ப்பு மற்றும் தொழிலகங்களில் பணியாளர்களின் திறன் மேம்பாட்டுக்கு உதவக்கூடிய புதுமையான உத்திகள் குறித்து உரையாற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு அமர்வுகளில் சுமார் 200 பேர் பங்குகொண்டனர். இக்கருத்தரங்கில் சிறந்த ஆய்வுகளை முன்வைத்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.