இலங்கைக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் – வெளியுறவுத்துறை அமைச்சகம்

இலங்கையின் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றும், ஜனநாயக முறைப்படி இலங்கை மக்களின் நலனில் இந்தியா எப்போதும் கவனம் செலுத்தும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்ததன் காரணமாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, அத்தியாவசிய பொருட்களின் விலை, உணவு, உயிர்காக்கும் மருந்து பொருட்கள், பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை உயர்ந்தது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதையடுத்து மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர். இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இலங்கையில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா முழுமையாக ஆதரவளித்து வருகிறது.

மேலும் இந்திய அரசு அண்டை நாடுகளின் கொள்கைகளுக்கு ஏற்ப இலங்கையில் உள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க இலங்கை அரசுக்கு 2022ம் ஆண்டு மட்டும் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது.

இவை தவிர, உணவு மருத்துவம் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் இலங்கையில் நிலவும் பற்றாக்குறையை தணிக்ககூடிய வகையில் இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கியுள்ளது.

ஜனநாயக முறைப்படி இலங்கை மக்களுடைய நலன்களில் இந்தியா எப்போதும் கவனம் செலுத்தும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.