ஏன் மின் நெருக்கடி பிரச்சனை இருக்கிறது? – அரசுக்கு சாக்‌ஷி தோனி கேள்வி

நிலக்கரி தட்டுப்பாடு பிரச்சினைக்கு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின் நெருக்கடி தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்‌ஷி சிங் அம்மாநில அரசுக்கு நேரடியாக ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. நிலக்கரி பற்றாக்குறையால், மின் பற்றாக்குறையை சமாளிக்க மின் நிறுவனங்கள் மாநிலத்தில் மின் சுமையை குறைக்க மின் வெட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் எதிரொலியால், பல்வேறு மாநிலங்களிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதுடன், இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இது தொடர்பாக சாக்‌ஷி தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: ஜார்கண்ட் மாநிலத்தின் வரி செலுத்துபவராக இங்கு பல வருடங்களாக மின் நெருக்கடி பிரச்சனை ஏன் இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன் எனக் கூறியுள்ள அவர், நாங்கள் எங்களது பங்கைச் சரியாக செய்து வருவதன் வாயிலாக மின் ஆற்றலைச் சேமித்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.