உலகை புரிந்து கொள்ள உதவும் புத்தக வாசிப்பு!

ஒருவரின் புத்தக வாசிப்பு என்பது அவரின் சிந்தனையை மாற்றும் சக்தி கொண்டது. பல நேரங்களில் அறிவு சார்ந்ததாக மட்டுமில்லமால் நமக்கான ஒரு அனுபவத்தையும் புத்தகங்கள் ஏற்படுத்தி விட்டு செல்கிறது. மனிதனின் பண்புகள் மாற கூட அவை காரணமாக அமைகின்றன.

வாசிப்பு பழக்கம் சற்று பரிணாமம் அடைந்து வருகிறது என்றே கூறலாம். புத்தகம் மூலம் நேரடி அனுபவத்தை பெற முடியவில்லை என்றாலும் டிஜிட்டல் வாயிலாக நமக்கு வேண்டியவற்றை படித்து தெரிந்து கொள்ளலாம்.

“மின் புத்தகங்கள் வந்த பிறகு புத்தகம் கிடைப்பது எளிதாகியிருக்கிறது; எடுத்துச் செல்வது எளிதாகியிருக்கிறது. இதனால், அதற்கென ஒரு சந்தை உருவாகியிருக்கிறது. ஆனால், அச்சுப் புத்தகங்களுடன் உள்ள நெருக்கத்தையும் புத்தக வாசத்தையும் மின் புத்தகங்களால் ஒரு போதும் தர முடியாது.” என்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

“புத்தகங்களை வாசிப்பவா்களுக்கு உலகம் தெரியாது. அவா்கள் வெறும் கற்பனையில் வாழக்கூடியவா்கள் என்ற பொய்யான எண்ணம் பலரிடமும் இருக்கிறது. அது உண்மையில்லை. தன்னைச் சுற்றிய உலகை புத்தக வாசிப்பாளா்கள் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறாா்கள்.” என்றும் அவர் தெரிவிக்கிறார்.

ஒரு நல்ல கதையை வாசிப்பது என்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விட அதிக நன்மைகளை அளிப்பதை விட வாசிப்பாளரின் மனதில் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி செல்வதோடு, அது குறித்து மிக ஆழமாகவும் சிந்திக்க வைக்கிறது.

உண்மையில் தொலைக்காட்சி அறிமுகமாவதற்கு முந்தைய தலைமுறையினா் கொடுத்து வைத்தவா்கள். அவா்கள் புத்தகங்களின் வழியே மட்டுமே உலகை அறிந்து கொண்டாா்கள். தவறாமல் நூலகத்துக்குப் போய் வந்தாா்கள்.

நாம் மேலோட்டமாக படிக்கும்போது, நாம் தகவலை மட்டும் பெறுகிறோம். நாம் ஆழமாகப் படிக்கும்போது, நமது பெருமூளைப் புறணியை அதிகம் பயன்படுத்துகிறோம். ஆழ்ந்த வாசிப்பு என்பது நாம் தொடர்பு முறையை உருவாக்குவதாகும். நாம் அனுமானங்களை உருவாக்குகிறோம். இது நம்மை உண்மையிலேயே விமர்சனம், பகுப்பாய்வு, கருணை கொண்ட மனிதர்களாக உருவாக்குகிறது.

வாங்கி வைத்த புத்தகங்களை வாசிக்க நேரமில்லை என அங்கலாய்ப்பவர்கள் அதிகம். உண்மையில் அதுவா காரணம்? நமக்கு விருப்பமில்லை என்பதே உண்மை!

நம் அரசியல்வாதிகளில் பலர் இலக்கியப் பாடங்களை கல்லூரிகளில் படித்தவர்கள் இல்லை. ஆனாலும் அவர்களால் தேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்களை விடவும் சிறப்பாக இலக்கியங்களைப் பேச முடிகிறதே எப்படி? யோசித்துப் பார்த்தால் அவர்கள் தொடர்ந்து வாசிப்பவர்களாக இருப்பதே அதற்குக் காரணம் என்ற உண்மை விளங்கும்.