ஒரே நிறுவனம், 84 ஆண்டுகள் வேலை: ஆச்சரியமூட்டும் 100 வயது முதியவர்!

இன்றைய நம் அவசர உலகத்தில் வாழ்நாள் முழுவதுமே ஒரே நிறுவனத்தில் மட்டுமே பணியாற்றி ஓய்வு பெறுவது என்பது தனியார் துறைகளில் பணியாற்றும் பலருக்கும் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று. சில வருடங்கள் பணியாற்றி விட்டு வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வது தான் பெரும்பாலும் வழக்கமாக உள்ளது. இதற்கு பல்வேறு தனிப்பட்ட காரணங்கள் ஒருவருக்கு இருக்கலாம்.

இப்படிப்பட்ட நிலையில், பிரேசில் நாட்டின் பிரஸ்க் நகரைச் சேர்ந்த வால்டர் ஆர்த்மேன் என்பவர் ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். சற்றே நம்மை மலைக்க வைக்கிறது அல்லவா? ஆம்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர், ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகள் பணி புரிந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 100 வயது நிரம்பிய ஆர்த்மேன் துணி ஆலையில் பணிபுரிந்து இந்த சாதனையை ஏற்படுத்தி உள்ளார்.

ரெனக்ஸ் வியூ என்ற ஆடை நிறுவனத்தில் தனது 16 வயதில் கடை மட்ட ஊழியராக பணிக்கு சேர்ந்த ஆர்த்மான் தற்போது அதே நிறுவனத்தின் வியாபார பிரிவின் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

மெல்ல மெல்ல பதவி உயர்வு, அதற்கேற்ற சம்பள உயர்வு ஆகியவற்றால் அந்நிறுவனத்தை விட்டு வெளியேற மனமில்லாமல் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவதாக கூறுகிறார். தற்போது 100 வயதிலும் உற்சாகத்துடன் அவர் பணியாற்றி வருகிறார்.

பணியை விரும்பி செய்தால், ஒரே நிறுவனத்தில் நிச்சயம் நீடிக்க முடியும் என்கிறார். அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது போல, ஆரோக்கியத்திலும் தீவிர கவனம் செலுத்துவது அவசியம் என கூறும் வால்டர், பெரும்பாலும் வயிற்றுக்கு ஒவ்வாத அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் உண்பதை தவிர்த்து விடுவாராம். தவிர, தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுவதிலும் தவறுவதில்லை இவர்.

விரும்புவதை செய்து துரித உணவுகளில் இருந்து விலகியிருந்தால் நீண்ட காலம் நிறைவான தொழில் வாழ்க்கை சாத்தியம் என்கிறார் ஆர்க்மேன். மேலும், ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தை கடைப்பிடிக்கும்படி இளைஞர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.