கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி நிறுத்தம் – சீரம் நிறுவனம் அறிவிப்பு

போதிய தேவை இல்லாததாலும், கோடிக்கணக்கான தடுப்பூசிகள் விற்பனை ஆகாமல் கையிருப்பில் உள்ளதாலும் கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்திவிட்டதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இதுவரை 187 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோடிக்கணக்கான தடுப்பூசிகள் விற்பனை ஆகாமல் கையிருப்பில் உள்ளதால் கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்திவிட்டதாக சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது: தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து விற்பனையாகாத கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் தற்போது கையிருப்பில் உள்ளது. 20 கோடி தடுப்பூசி கையிருப்பில் உள்ளன. அவற்றை என்ன செய்வது என்று தெரியவில்லை. காலாவதி ஆகிவிடும் என்பதால் உற்பத்தியை நிறுத்த கூறிவிட்டேன். இதன் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே தடுப்பூசி உற்பத்தியை நிறுத்திவிட்டோம் என்று அவர் தெரிவித்தார்.