முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் – தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் டெல்லி போன்ற மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரோனா அதிகரிப்பைக் கண்டு மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என்றும் மக்கள் பதட்டமடையத் தேவையில்லை என்று மத்திய அரசே கூறியுள்ளது என்பதையும் தெரிவித்தார்.

கொரோனா தொற்றைத் தவிர்க்க பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனக் கூறிய அவர், தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

கொரோனா தொற்றைக் குறைக்க சமூக இடைவெளியையும் மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
தடுப்பூசி தொய்வையும் சரிசெய்யும் பொருட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். தொற்று அறிகுறி இருந்தால் தவறாமல் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார்.

வரும் நாளில் தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.