ஆப்கான் பள்ளி மீது தாக்குதல்: 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு காபூலில் உள்ள ஹசாரா பகுதியில், உயர்நிலைப் பள்ளிகள் மீது அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு தாக்குதலில், மாணவர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தனியார் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் வெளியேறின. அதன்பின்னர் அங்கு தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். ஆப்கானிஸ்தானில் மிகக் கடுமையான சட்டங்களை பின்பற்றி வரும் தலிபான்கள், இதுவரை பெண் கல்வியை அங்கீகரிக்கவில்லை. பள்ளி, கல்லூரிகளில் ஆண்களை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

தங்கள் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பாக இருக்கும் தாலிபான்கள் தொடர்ந்து கூறிவந்தாலும், அந்நாட்டில் ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஹசாரா பகுதியில் வசிப்பவர்கள், ஷியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இச்சமூகத்தினர், சன்னி பயங்கரவாத குழுக்களால் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் இன மற்றும் மத சிறுபான்மையினர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக காபூல் காவல்துறை செய்தி தொடர்பாளர் காலித் சத்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த தாக்குதல் அப்துல் ரஹிம் சாஹித் உயர் நிலை பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதில் நமது ஷியா பிரிவு சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலின் போது மாணவர்களை குறிவைத்து கிரனேடுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இது போன்ற தாக்குதல் ஷியா மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தான் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.