இலங்கை எதிர்கொள்ளும் உணவு நெருக்கடி: இயற்கை உரம் காரணமா?

இலங்கை முழுவதுமே கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடும் மக்களை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. எரிவாயு, மண்ணெண்யை வாங்க மக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

இலங்கைக்கு மூன்று வழிகளில் அதிகமான பணம் வருகிறது. ஒன்று தேயிலை, இரண்டாவது ஆடை உற்பத்தி மூன்றாவது சுற்றுலா. பொருளாதாரத்தில் இந்த மூன்று துறைகள்தான் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த மூன்று துறைகளிலும் படிப்படியாக பொருளாதார பின்னடைவு ஏற்பட ஆரம்பித்தது.

கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இனி ரசாயன உரங்களை இறக்குமதி செய்யப்போவதில்லை என்றும், விவசாயிகள் அனைவரும் இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. இது உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. வேறு வழியில்லாமல் உணவு தானியங்களை வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியதால் அந்நியச் செலாவணி கையிருப்பு இன்னும் குறைந்து போனது.

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள உணவு நெருக்கடியை தீர்க்க நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் இதனைவிட கடுமையான உணவு நெருக்கடியை இலங்கை எதிர்நோக்க நேரிடும் என அந்நாடுகளிடம் முன்னாள் பிரதமர் விளக்கியுள்ளார்.

சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நிதி உதவியையே இலங்கை நம்பியிருக்கிறது
பொருளாதார நெருக்கடி தொடர்பாக கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியன்று கருத்துத் தெரிவித்த இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “மே மாதத்துடன் இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறும் உதவிகள் நிறைவுக்கு வரும். அதன் பின்னர் என்ன செய்யப் போகின்றனர்? இலங்கையில் மிகப் பெரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத அளவில் மக்களுக்கு வாழ முடியாத சூழல் ஏற்படும்” என்று தெரிவித்தார்.

உரத் தட்டுப்பாடு, விளை பொருட்களை விற்பனை ஆகியவற்றில் உள்ள சிக்கல்கள் போன்றவற்றால் இலங்கையின் விவசாயிகள் எதிர்கொண்டுவரும் பல்வேறு பிரச்னைகள் அந்நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்த நிலையில்தான் இலங்கையில் ரசாயன உரத்திற்குத் தடை விதித்ததன் மூலம் பெரும் தவறிழைத்துவிட்டதாக அந்நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பிபிசி தமிழ் செய்தியாளர் காசி விஸ்வநாதன் இலங்கை விவசாயிகளிடம் எடுத்த நேர்காணல் தொகுப்பில் கூறியிருப்பதாவது:

முல்லைத் தீவு மாவட்டத்தில் கொக்குத் தொடுவாய் கிராமத்தில் தனது ஐந்து ஏக்கர் காணியில் விவசாயம் செய்துவரும் சிவஞானசுந்தரம், இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டுமெனக் கூறியதால் பெரும் இழப்பைச் சந்தித்ததாகத் தெரிவிக்கிறார்.

“இவர்கள் திடீரென்று இயற்கை உரங்களையே நீங்கள் பயன்படுத்துங்கள். ரசாயன உரத்தைப் பயன்படுத்த முடியாது. அதனை நாங்கள் வாங்கித் தரப்போவதில்லை என்று அறிவித்தார்கள். எங்களுக்கும் அதைக் கேட்க நல்லாத்தான் இருந்தது. ஆகவே அதன்படி செய்தோம். ஆனால், இழப்புதான் ஏற்பட்டது. இது தவிர, இன்னொரு பிரச்சனையும் எழுந்தது. அதாவது இயற்கை உரத்தில் இருந்த விதைகள், நாங்கள் போட்ட பயிர்களைச் சுற்றி களைகளாக வளரத் துவங்கின. ஒரு சின்ன மழைக்கே நாங்கள் வைத்த பயிரைவிட அவை வேகமாக வளர்ந்தன. களைக் கொல்லிகளும் இல்லாத நிலையில் இது பெரும் பிரச்சனையாக மாறியது” என்கிறார் சிவஞான சுந்தரம்.

“2020-21 காலப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்திலிருந்து 25 முதல் 30 மூட்டை நெல்லைப் பெற்றுக் கொண்டோம். இந்த வருடம் அதே நிலத்திலிருந்து 5 மூட்டை, பத்து மூட்டை நெல்லைக்கூட நாங்கள் பெறவில்லை. அதற்கு முக்கியக் காரணம் இந்த சேதனப் பசலையைப் (இயற்கை உரத்தை) பாவிச்சது. யூரியா இல்லாமல் நாங்கள் பயிர் செய்ய இயலாது” என்கிறார் முல்லைத் தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிவலிங்கம்.

“அரசாங்கம் இயற்கை உரங்களைத்தான் பயன்படுத்த வேண்டுமென அறிவித்தபோது எல்லா விவசாயிகளிடமும் இயற்கை உரக் கிடங்குகள் கிடையாது. வெளியிலிருந்துதான் வாங்க வேண்டியிருந்தது. ஆனால், எல்லா விவசாயிகளுக்கும் கொடுக்கும் அளவுக்கு யாரிடமும் இயற்கை உரங்களும் இல்லை. முடிவில், தங்களுடைய பயிர்களுக்கு தேவையான தருணத்தில் பசலைகளை போட இயலாத நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டார்கள். இதனால், விவசாய உற்பத்தியில் 70 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி ஏற்பட்டது.” என்கிறார் துளசிராம்.

தற்போது விவசாயிகள் ரசாயன உரத்தை நாட ஆரம்பித்திருந்தார்கள். இருந்தாலும் இறக்குமதிக்குத் தடை இருப்பதால், அவற்றின் விலை கடுமையாக அதிகரித்திருந்தது. முன்பு 1,800 ரூபாய்க்கு விற்ற 50 கிலோ மூட்டையின் விலை தற்போது 32 ஆயிரம் ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

 

Source: BBC Tamil