சிறுதுளியின் ‘இயற்கையை பேணிக் காப்போம்’ பயிற்சி முகாம்

கோவையைச் சேர்ந்த சிறுதுளி அமைப்பு 14 வது வருடமாக ‘இயற்கையை பேணிக் காப்போம், என்ற தலைப்பில் இலவச கோடைகால சிறப்பு பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது. வ.உ.சி பூங்காவில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவிற்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை
தாங்கினார்.

குளம் குட்டைகளை தூர்வாருவது, மரக்கன்று நடுவது, மழைநீர் சேகரிப்பு போன்ற எண்ணற்ற இயற்கை சார்ந்த பணிகளை இவ்வமைப்பு செய்து வருகிறது.

இந்த நிலையில் இவ்வமைப்பின் சார்பாக இயற்கையை பேணிக் காப்போம் என்ற சிறப்பு முகாம் ஏப்ரல் 19 ஆம் தேதியில் இருந்து 23 ஆம் தேதி வரை நடைபெறயுள்ளது. இந்த முகாமில் 12 பள்ளிகளில் இருந்து 70 மாணவ, மாணவியர்கள் பங்கேற்க உள்ளனர்.

முதல் நாளான செவ்வாய்க் கிழமை அன்று மாணவ மாணவிகளுக்கு காற்று மற்றும் தண்ணீர் பற்றிய புரிதலை சிறுதுளி அமைப்பை சேர்ந்த குழுவினர் விளக்கியதோடு, பலவகை செயல்முறைகளால் உரம் தயாரித்தல், மரங்களின் வகைகள் மற்றும் இலைகளின் பண்புகள் பற்றி கூறப்பட்டது.

5 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் இயற்கை சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் விளக்கப்படவுள்ளது.