முரண்பாடுகள் இருக்கலாம், காழ்புணர்ச்சி கூடாது – தமிழிசை சவுந்தரராஜன்

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் அரசுக்கும், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இடையே கடந்த சில மாதங்களாக சுமூகமான உறவு இல்லாத நிலை இருந்து வருவதால் அவர் விரைவில் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகி பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவசர அழைப்பின் பேரில் தமிழிசை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக கடந்த 2019 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதற்கிடையே புதுச்சேரி கவர்னராக இருந்த கிரண்பெடி பதவி நீக்கம் செய்யப்பட்டு தமிழிசை சவுந்தரராஜனுக்கு 2021 இல் புதுச்சேரி கவர்னர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.

இதையடுத்து அவர் இரு மாநில கவர்னராக இருந்து வருகிறார். வாரத்தில் சில நாட்கள் புதுவையிலும், சில நாட்கள் தெலுங்கானாவிலும் பணியாற்றி வருகிறார்.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் அந்த மாநிலத்தில் தற்போதைய நிலையில் தமிழிசையை மாற்றிவிட்டு புதிய கவர்னரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

சுமூகமாக பணியாற்றும் வகையில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தமிழிசை கவர்னராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது. எனவே தமிழிசை கேரள மாநில கவர்னர் அல்லது புதுவைக்கு முழுநேர கவர்னராகவோ நியமிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் மற்றும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இடையே மோதல் நிலவி வருவதாகவும், அதனால் அவர் விரைவில் மாற்றப்படலாம் எனவும் பேசப்பட்டு வரும் நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அதன் சுருக்கத்தை காண்போம்.

மாநில அரசுக்கும் உங்களுக்கும் சுமூகமான உறவு இல்லை அதனால் நீங்கள் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது அதைப்பற்றி?

மாற்றப்படலாம் என்ற கருத்து யூகங்களின் அடிப்படையில் வெளியானது. எனது கடமையை ஆற்றியதால் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா அரசு கொடுத்த MNC யை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் சில பிரச்னைகள் ஏற்பட்டது. அதற்காக தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி வரவேண்டாம் என்பது என் கருத்து. வேறு எந்த விதத்திலும் மாநில அரசுக்கு எதிராக நான் செயல்படவில்லை.

மத்திய அரசு எதிர்ப்பு என்ற நிலையில் இருக்கும் மாநில அரசு, ஆளுநரையும் எதிர்க்க வேண்டும் என்ற ஒரு கொள்கை முரண்பாடு நிலவுகிறது. ஆளுநர்கள் தங்கள் கடமையையும், அரசியலமைப்பையும் பின்பற்றும் போது இது மாதிரியான காழ்புணர்ச்சிகள் வரவேண்டாம் என்பது எனது கருத்து.

தமிழகத்திலும் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் மோதல் உள்ளதே? அங்கு ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு பற்றி?

தமிழக விசயத்தில் நான் தலையீடவில்லை. புதுசேரியிலும் இதுபோன்ற ஒரு அழைப்பை நான் விடுத்திருந்தேன். அழைப்புகளை அழைப்புகளாக மட்டுமே பாருங்கள். அழைப்புகளை அரசியலாக பார்க்காதீர்கள். பல அரசியல் தலைவர்கள் இங்கு சுமூகமான உறவை மேற்கொண்டு பணியாற்றியுள்ளனர். முரண்பாடுகள் இருக்கலாம் தவிர அது காழ்புணர்ச்சியாக மாறக்கூடாது. அழைப்புகளை அன்பான அழைப்பாக மட்டும் பாருங்கள்.