உயிர் அமைப்பின் சார்பில் ஓவியக் கண்காட்சி

உயிர் அமைப்பின் சார்பில் நடத்தும் ஓவியக் கண்காட்சி கோவை ஆர்.எஸ். புரத்தில் அமைந்துள்ள கிக்கானி வித்யா மந்திர் பள்ளியில் திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

சாலை விபத்துகளினால் உண்டாகும் உயிரிழப்பு, உடல் ஊனம் ஆகியவற்றை தவிர்க்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது தான் ‘உயிர்’ அமைப்பு. இந்த அமைப்பு பல்வேறு வகையிலும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் உயிர் அமைப்பின் சார்பாக கிக்கானி வித்யா மந்திர் பள்ளியின் கலையரங்கத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

இதில் 20 க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. சாலை பாதுகாப்பு குறித்த பல ஓவியங்கள் மாணவ மாணவியர்களின் கை வண்ணத்தில் காட்சிக்கு வைக்கப்படிருந்தன.

இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் வால்டர் லிண்டர் கண்காட்சியினை பார்வையிட்டு மாணவர்களிடம் அதற்கான விளக்கங்களை கேட்டறிந்தார்.

போக்குவரத்து சிக்னல்களை மதித்தல், ஒருவழிபாதையில் வாகனம் ஓட்டாமை, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது, சாலையை கடக்க ஒதுக்கப்பட்ட பகுதியில் மட்டும் மக்கள் கடந்து செல்லவேண்டும் உள்ளிட்டவற்றை விளக்கும் விழிப்புணர்வு ஓவியங்கள் இதில் இடம்பெற்றிந்தன.

உயிர் அமைப்பின் அறங்காவலர் குழுவினை சேர்ந்த கங்கா மருத்துவமனை மருத்துவர் ராஜசேகரன், ரூட்ஸ் குரூப்ஸ் ஆப் இண்டஸ்ட்ரியின் தலைவர் ராமசாமி இதில் கலந்து கொண்டனர்.