அன்பு நிறைந்த பூமியில் வன்முறைக்கு இடமில்லை: என் செயலுக்கு வருந்துகிறேன் – வில் ஸ்மித்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியை அமெரிக்காவின் பிரபல ஸ்டான்ட்-அப் காமெடியனான கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அப்போது நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா ஸ்மித்தின் தலை குறித்து கிறிஸ் ராக் நகைச்சுவைக்காக கிண்டலாக பேசினார்.

இதனைக் கேட்டு கோபமான வில் ஸ்மித் மேடையேறி சென்று கிறிஸ் ராக்கை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் நிகழ்ச்சி மேடையிலேயே வில் ஸ்மித் மன்னிப்புக் கேட்டிருந்தார்.

வில் ஸ்மித்தின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், பலரும் உருவக்கேலிக்கு எதிரான நடவடிக்கையாக இதனைப்பார்த்து பாராட்டியுள்ளனர்.

தன் செயலுக்கு மிகவும் வருந்துவதாக வில் ஸ்மித் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.

வில் ஸ்மித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வன்முறை அதன் அனைத்து வடிவங்களிலும் விஷமானது மற்றும் அழிவுகரமானது. நேற்றிரவு நடந்த அகாடமி விருதுகளில் எனது நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மன்னிக்க முடியாதது. ஒரு விழா மேடையில் நகைச்சுவை என்பது இயல்பானது தான். ஆனால் ஜாடாவின் உடல்நிலை பற்றிய நகைச்சுவை என்னால் தாங்க முடியாத அளவுக்கு இருந்தது. அவரின் உடல்நல பாதிப்பு குறித்து தொகுப்பாளர் கிறிஸ் ராக் கேலி செய்தது என்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது.

நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், நான் வெட்கப்படுகிறேன். அன்பு நிறைந்த இந்த பூமியில் வன்முறைக்கு இடமில்லை. இந்த செயலுக்கு மிகவும் வருந்துகிறேன். எனது செயலுக்காக கிறிஸ் ராக்கிடமும், நிகழ்ச்சி அமைப்பாளர்களிடமும், நிகழ்ச்சியை நேரிலும் தொலைக்காட்சி வழியாக பார்த்த பார்வையாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.