புதிய அமேசான் கட்டிடத்தில் அப்படி என்ன சிறப்பு?

மூன்று நாள் துபாய் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு, தமிழகம் திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால், தமிழ்நாட்டில் அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இது இந்தியாவில் அமேசானின் இரண்டாவது பெரும் அலுவலகம். தமிழகத்தில் இது 4வது அமேசான் நிறுவனம் ஆகும். இந்த அலுவலகம் 8.3 ஏக்கர் நில பரப்பில் பெருங்குடியில் உள்ள ராஜீவ் காந்தி சாலையில் உலக வர்த்தக மையத்தில் (IT காரிடார்) அமைந்துள்ளது.

இங்கு 6000 நபர்கள் வேலை செய்யும் வண்ணம் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த பெரும் கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அறையும், தளமும் பணியாளர்கள் குழுவாக சேர்ந்து சிறப்பாக செயல்படவும், நல்ல சிந்தனைகள் பெருகும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு தளத்தில் இருக்கும் வெவ்வேறு குழுக்கள் (வாடிக்கையாளர் சேவைப்பிரிவு, தொழில்நுட்ப பிரிவு, அமேசான் எக்கோ குழு) எளிதில் இணைந்து கருத்துக்களை பரிமாறவும், சேர்ந்து செயல்படவும் எளிதாக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பணியாளர்களின் உடல் நலம், உற்பத்தி திறனை அதிகப்படுத்த பல்வேறு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நீர் நுகர்வு 76% மும், (energy) பிற பெரும் கட்டிடங்களை விட 23% ஆற்றல் நுகர்வும் குறைவாக இருக்கும்படி கட்டப்பட்டுள்ளது.

அதிநவீன வீடியோ கான்பரன்சிங் சேவைகள் பொருந்திய தளங்கள், மருத்துவ அறை, பொழுதுபோக்குகள் நிறைந்த புத்துணர்வு அறைகள், பலநாட்டு உணவுகள் கொண்ட கஃபே இன்னும் பல அம்சங்கள் உள்ளன.

தமிழ் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் வெறும் 50 பணியாளர்களுடன் துவங்கப்பட்ட அமேசான் நிறுவனத்தில் தற்போது 14000 க்கும் அதிகமானவர்கள் பணி செய்து வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்தியா முழுவதும் 2025 க்குள் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அமேசான் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Article by: David Karunakaran.S