உயரப் பறக்கும் பெட்ரோல், கேஸ் விலை

புலி வருகிறது புலி வருகிறது என்று சொல்லிக் கொண்டே இருந்துவிட்டு உண்மையிலேயே இப்போது புலி வந்திருக்கிறது. பல மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்த கேஸ், பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்பட்டு இருக்கிறது. இதற்கு நிர்வாக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பாதிக்கப்படுவது என்னவோ கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர குடும்பத்து மக்கள்தான்.

பெட்ரோல், டீசல் விலை சில ரூபாய் உயர்வு தான் என்கிறார்கள். ஆனால் இதன் தொடர்ச்சியாக அனைத்து பொருள்களின் விலைவாசி உயர்வது தவிர்க்க முடியாததாகும்.

இன்றைய காலகட்டத்தில் பல கிராமங்களிலும் கூட கேஸ் இல்லாமல் சமையல் செய்ய முடியாது என்ற நிலை வந்திருக்கிறது. நகர பகுதிகளைப் பொறுத்தவரை கேஸ் இல்லை என்றால் பருப்பு வேகாது சோறும் வேகாது என்பதுதான் உண்மை.

சில ஆண்டுகளுக்கு முன்பு 600 ரூபாய்க்கு இருந்த கேஸ் விலை இன்று படிப்படியாக விலை உயர்ந்து ஆயிரத்தை தொடப் போகிறது. அந்த கடைசிப் படி தான் இந்த 50 ரூபாய் விலை உயர்வு.

இதே முறையில் வணிகரீதியான கேஸ் சிலிண்டர்கள் விலையும் உயர்ந்து உணவை விற்கும் உணவகங்களின் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளது. இப்பொழுது இந்த 50 ரூபாய் விலை உயர்வு சத்தமில்லாமல் நடுத்தர மக்களின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டு இருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக வேலைவாய்ப்பு, சம்பளம் குறைந்து நடுத்தர வர்க்கம் தத்தளித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு பள்ளி கட்டணத்தை கட்ட வேண்டிய பெற்றோர்கள் பள்ளிக் கட்டணத்திற்கும், போக்குவரத்திற்கும் பைசா எண்ணி எண்ணி செலவழித்து வரும் நிலையில் இந்த ஐம்பது ரூபாய் விலை உயர்வு இனி எப்பொழுதெல்லாம் கேஸ் விலை உயரும் என்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு மாதமும் பட்ஜெட்டில்  ஆயிரம் ரூபாய் சிலிண்டருக்கு ஒதுக்குவது என்பது வாடகை வீட்டில் வசித்து கொண்டு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்திற்கு பெரும் சுமைதான்.

இன்னொருபுறம் கூடுதல் போனஸ் போல கேஸ் விலையுடன், விலை உயர்வாக பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இன்றைய நகர மயமான சூழலில் இருசக்கர வாகனம் இல்லாதவர்கள் குறைவே. ஒரு லிட்டர் பெட்ரோல் என்பது மிகக் குறைந்த பயன்பாட்டுக்கே பயன்படுகிறது. இப்படி ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்றும் உயர்ந்து கொண்டே போனால் இரு சக்கர வாகனத்தை மக்கள் தள்ளிக்கொண்டே போக வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.

இன்றைய நகர சூழலில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு வேலைக்குச் செல்ல பலரும் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வருகிறார்கள். சென்னை போன்ற ஒரே ஒரு நகரத்தை தவிர வேறு எங்கும் மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் கிடையாது. இந்த நிலையில் வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது எப்படி, வேலைக்கு போவது எப்படி என்பது புரியாத நிலையில் நடுத்தர வர்க்கம் உள்ளது.

பொதுவாக கோவை போன்ற மாவட்டங்கள் கொரோனாவுக்கு பிறகு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலப்பொருள் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிற்சாலைகள் மிகவும் சிரமப்படுவதோடு, அது சார்ந்த தொழிலாளர்களும் சிரமப்படுகிறார்கள். அதைப்போலவே டெல்டா மாவட்டங்களில் கடந்த மாதங்களில் பருவம் தப்பி பெய்த மழையால் விவசாயம்  பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் சில மாதங்கள் அமைதியாக இருந்த பெட்ரோல் விலை உயர்வும், கேஸ் விலை உயர்வும் பறக்கத் தொடங்கி இருக்கின்றன. தனியாக பார்க்கும் போது கேஸ் 50 ரூபாய்,  பெட்ரோல், டீசல் கொஞ்சம்  விலை உயர்வு என்கிற மாதிரி தெரியும். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விலை எவ்வளவு இருந்தது என்று பார்க்கும் போது தான் சிக்கல் தொடங்குகிறது. அதுவும் பெருந்தொற்றுக்கு பிறகான காலகட்டத்தில் மக்களின் சுமையை இது கூட்டுவதோடு இது தொடர்பான அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமையும்.

இப்போதுதான் கொரோனாவின் மூன்றாம் அலை முடிந்திருக்கிறது. இன்னும் பிரான்ஸ் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வருகின்ற ஜூன் மாதம் இந்தியாவிற்கும் நான்காம் அலை வரலாம் என்ற ஒரு கருத்தும் உள்ளது. தமிழக அரசும் கூட முக கவசம் அணிவதை கைவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு உள்ளது.

எனவே இந்த நிலையில் விலை உயர்வை நிர்வகிக்கும் பொறுப்பில் பெட்ரோல் நிறுவனங்கள் இருந்தாலும் மக்கள் நலனை பாதுகாப்பவர்கள் என்ற முறையில் மத்திய அரசு தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும் அதற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் குறிப்பிட்ட காலத்திற்காவது விலை உயர்வு இருக்காது என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைக்கவேண்டும். மக்கள் பொருளாதார திட்டமிடுதலுக்கு தயாராகும் வகையில் இந்த விலை உயர்வு அமைய வேண்டும்.

ஏனென்றால் இந்த விலை உயர்வு மூலம் இது தொடர்பான பொருட்கள் அனைத்தும் விலை ஏறும்போது மக்களின் வாழ்க்கை நிலை கேள்விக்குறியாகி விடும்.