ரோட்டரி சார்பில் அரசுப் பள்ளியில் வகுப்பறைகள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைப்பு

நரசிபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கோவை டெக்ஸிட்டி ரோட்டரி கிளப் சார்பில், 85 லட்சம் ரூபாய் செலவில் அமைத்த 8 வகுப்பறைகளை தமிழ்நாடு மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரான் முன்னிலை வகித்தார். ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3201 சமூக சேவை மாவட்ட தலைவர் சுப்ரமணியன், டெக்ஸிட்டி ரோட்டரி தலைவர் முகமது இர்பான், உறுப்பினர்கள் மாருதி, ரமேஷ் பொன்னுசாமி, அரவிந்த், செந்தில்ராஜூ, வைரவன், பிரிஜேஷ், ரெஜி மற்றும் மேனகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரோட்டரி டெக்ஸ்சிட்டி இயக்குனர் ரமேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். ரோட்டரி உறுப்பினர்கள் மற்றும் சமுதாய பொறுப்பு பங்குதாரர் மோல்டு மாஸ்டர்ஸ் (நான்கு வகுப்பறைகளுக்கு உதவியவர்) மற்றும் இந்த 85 லட்ச ரூபாய் வகுப்பறைகளை முடிக்க உதவியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், “மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். ரோட்டரி கிளப் நிகழ்ச்சியில் பங்கேற்று வகுப்பறைகளை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நானும் ஒரு ரோட்டரி கிளப் உறுப்பினர் என்பதில் பெருமையாக உள்ளது,” என்றார்.

மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் சமீரான் பேசுகையில், “புதிய அரசின் திட்டத்தில் இன்னும் பல பள்ளிகள் பயன்பெறப்போகின்றன. 3 ல்1 பங்கு நிதியை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அளித்தால், மீதமுள்ள தொகையை அரசு தனது பங்காக வழங்கும்,” என்றார்.

தலைமை ஆசிரியை பேசுகையில், “மாணவர்களுக்கு படிக்க போதுமான வகுப்பறைகள் இல்லாத நிலையில், டெக்ஸிட்டி ரோட்டரி கிளப் தலைவர் கமல்குமார் இந்த முயற்சியை மேற்கொண்டு 2020 ம் ஆண்டு முதல் இந்த திட்டத்தை மேற்கொண்டு நிறைவேற்றி தந்துள்ளார். மிக்க நன்றி,” என்றார்.