கே.ஐ.டி கல்லூரியில் மகளிர் தின விழா

கே.ஐ.டி கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்வில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 110 ஆசிரியர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவிகளுக்கும், பேராசியர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர். நா.பழனிசாமி மற்றும் துணைத்தலைவர் இந்து முருகேசன் கலந்துகொண்டு கூறுகையில், இந்திய வரலாற்றில் பெண்கள் ஜனாதிபதியாகவும், ஆட்சியாளர்களாகவும், விண்வெளி வீராங்கனையாகவும், கல்வியில் சிறந்தவர்களாகவும் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் பெண்கள் தொழிலதிபர்களாகவும், பல துறைகளில் மேம்பட்டவர்களாகவும் திகழ்கின்றனர். இன்ஜினியர்களாகவும், பைலட்களாகவும், விளம்பர மாடலிங்காகவும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். பெண்கள் ஆண்களுக்கு சமமாக சட்ட ரீதியான உரிமைகளை பெற்றுள்ளனர். பெண்கள் இன்று வேலைக்கு சென்று குடும்ப பொறுப்பை நிர்வகிக்கின்றனர்.

கடந்த சிலஆண்டுகளாக உலக பெண்கள் தினமானது முழுமனதுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இனி வரும் காலம் பெண்களுக்கு பிரகாசமான, சமமான, பாதுகாப்பான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம்.

இந்தியாவில் உள்ள நகர்ப்புற பெண்கள் சமஅந்தஸ்து பெற்றவர்களாகவும், கல்வியறிவுடையவர்களாகவும், தங்களது எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்களாகவும் இருக்கின்றனர். பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர இன்றைய தினத்தை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூறினர்.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள்  கலந்து கொண்டனர்.