பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் உலக உடல் பருமன் தினம் அனுசரிப்பு

உலக உடல் பருமன் தினம் ஆண்டு தோறும் மார்ச் 4 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தற்போதைய மருத்துவ ஆராய்ச்சி ஒன்று இந்தியாவில் மட்டுமே 135 மில்லியன் மக்கள் உடல் பருமனால் பாதிக்கபட்டுள்ளனர் என கூறுகிறது.

மேலும், கிராமப்புற மக்களோடு ஒப்பிடுகையில் நகர்ப்புற பெண்கள் தான் ஆண்களை விட அதிக எடை மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் வரிசையில் இந்திய மாநிலங்களுள் தமிழ்நாடு ஐந்தாம் இடத்திலும், புதுச்சேரி இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக உடல் பருமன் தினத்தையொட்டி பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் வளர் சிதை மாற்ற அறுவை சிகிச்சை துறையின் சார்பில் உடல் பருமன் மேலாண்மை மற்றும் அதன் பன்முகத்தன்மை கொண்ட அணுகுமுறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை உணவியல் நிபுணர் கவிதா வரவேற்புரை வழங்கினார்.

உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலமுருகன் தன் உரையில், உடல் பருமன் விழிப்புணர்வு தினத்தின் அவசியத்தை பற்றி கூறினார். தற்போது உடல் பருமன் என்பது ஒரு நோயாக பார்க்கப்படுகிறது எனவும், உடல் பருமனை கட்டுக்குள் வைத்தால் வேறு எந்த நோயும் ஏற்படாது எனவும் பேசினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உடல் பருமன் அறுவை சிகிச்சை மேற்கொண்ட வெற்றியாளர்கள் தங்களது எடை குறைத்தல் பயணத்தில் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ஆவணப்படக் காணொளி திரையிடப்பட்டது.

கண் மருத்துவ ஆலோசகர் மற்றும் பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் Rtn சுரேஷ்பாபு கௌரவ விருந்தினராக நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக கோயம்புத்தூர் வி.ஜி.எம் இரைப்பை மையத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் வி.ஜி மோகன் பிரசாத், (இரைப்பை குடல் மருத்துவர், ஹெப்பட்டோலோஜிஸ்ட், சிகிச்சை என்டோஸ்கோபிஸ்ட்) கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் டாக்டர் வி.ஜி மோகன் பிரசாத் பேசுகையில்: உடல்பருமன் உடையவர்களின் பிரச்சினைகளை யாரும் புரிந்து கொள்வதில்லை எனக் கூறிய அவர், சமுதாயம் அவர்களை புறந்தல்ல கூடாது என்பதை வலியுறுத்தினார்.

மேலும், உடல் எடை குறைப்பின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். உணவு உண்ணும் போது நாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தண்ணீர், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

நவீன சமூகத்தில் நமது வாழ்க்கை முறை மாற்றம் அடைந்து வருகிறது. அதனாலும் உடல் பருமன் ஒருவருக்கு ஏற்படுகிறது. எனவே வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கடைபிடிப்பது அவசியம்.

உடல் எடை கொண்ட ஒருவருக்கு உடல் பருமன் அறுவை சிகிச்சை மட்டுமே போதுமானது அல்ல. அவர் முறையான உணவு பழக்கத்தையும், உடற்பயிற்சியையும் பின்பற்ற வேண்டும்.

தற்போதைய இளைஞர்கள் அதிக நேரம் டிஜிட்டல் திரையிலேயே இரவில் தங்களது நேரத்தை செலவிடுகின்றனர். இது தூக்கமின்மைக்கும், உடற்பருமனுக்கும் வழிவகுக்கிறது. எனவே, இரவு நேரத்தில் நல்ல தூக்கம் அவசியம் என்பதை குறிப்பிட்டு பேசினார்.

பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன் இந்த நிகழ்ச்சியின் பாராட்டு உரையை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், நோயாளிகள், உடல் பருமன் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கொண்டனர்.