சினிமாவைத் தென்னிந்தியாவுக்குக் கொண்டுவந்த சாமிக்கண்ணு வின்சென்ட்

இன்று ஏப்ரல்,18. சினிமாவைத் தென்னிந்தியாவுக்குக் கொண்டுவந்த சாமிக்கண்ணு வின்சென்டின் பிறந்த நாள். இது ‘திரையரங்குகள் தின’மாக 80-20 மூவீஸ் கார்ப் என்ற அமைப்பால் கொண்டாடப்படுகிறது.

1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதன் சாமிக்கண்ணு வின்சென்ட்.

திரையிடும் கருவியை தனது தோள்களில் சுமந்துகொண்டு தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டுசென்று சலனப்படத்தைக் காட்டி நம்மிடையே சலசலப்பை உண்டுபண்ணியவர்.  இன்று க்யூப், யுஎஃப்எக்ஸ் எனத் தொழிற்நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும் ஆரம்பத்தில் திரையரங்குகளில் பயன்படுத்தப்பட்ட புரொஜெக்டர்களுக்கான தென்னிந்தியாவின் முதல் டீலர் இவர்தான்.

வெரைட்டி ஹால் என்ற பெயரில் முதல் திரையரங்கை  கோவை மண்ணில் 1914 ஆம் ஆண்டு துவங்கி சினிமாவை வெற்றிகரமானத் தொழிலாக மாற்றிக்காட்டியவர் இவர். 22 வயதில் சினிமாவை நேசிக்கத் தொடங்கிய சாமிக்கண்ணு தனது இறுதி காலம் வரை சினிமாவிற்காகவே வாழ்ந்தவர்.

ஆண்டுகள் பல கடந்தாலும் இவர் தொடங்கிய வெரைட்டி ஹால் திரையரங்கம் டிலைட் என்ற பெயரில் இப்போதும் கம்பீரமாக சாமிக்கண்ணுவின் நினைவுகளைச் சுமந்துகொண்டு நிற்கிறது.