கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுகவினர் தர்ணா

திமுக அரஜகமாக செயல்பட்டு வருவதாகவும், துணை ராணுவ பாதுகாப்போடு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறி கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தலை நியாயமாக நடத்தக்கோரியும், துணை ராணுவத்தின் பாதுகாப்போடு தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், கரூரில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து வந்தவர்களை திரும்ப அனுப்ப வேண்டும் என்று கூறியும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 9 பேரும் கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதனிடையே திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வெளியூர் ரவுடிகளை வெளியேற்ற வேண்டும், துணை ராணுவம் வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

கோவையில் இன்று பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. வெளியூர்காரர்கள் இதுவரை வெளியேரவில்லை. தேர்தலை பாதுகாப்பாக நடத்த துணை ராணுவத்தை வரவழைக்க வேண்டும். தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று கூறி தேர்தல் ஆணையம் உட்பட அனைவரிடமும் புகார் அளித்து விட்டோம். ஆனால். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் சட்டத்தை பின்பற்ற வேண்டும் இல்லை என்றால் அவரை மாற்ற வேண்டும்.

தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், “உதயநிதி அரசியல் அநாகரீகத்தை செய்கிறார்.முன்னாள் அமைச்சராக உள்ள வேலுமணிக்கு சாவுமணி அடிப்பேன் என்று பேசுகிறார். இந்த அராஜக செயலை கண்டிக்கிறோம். முழுக்க முழுக்க மாவட்ட நிர்வாகம் உடந்தையாக உள்ளது. தேர்தல் பணியில் இருந்து அந்த அதிகாரிகள் விலக வேண்டும். திமுக வெத்துவேட்டு அரசியல் செய்யக்கூடாது.” என்றார்.

இதனிடையே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.