உலக தேவையினால் பருத்தி விலை உயர்வு

சர்வதேச பருத்தி ஆலோசனை குழு, 2021-22 ஆம் ஆண்டு உலக பருத்தி நுகர்வு 25.63 மில்லியன் டன்களாக இருக்குமென கணித்துள்ளது. இது 2020-21 ஆம் ஆண்டு நுகர்வைவிட 5 சதவீதம் அதிகமாகும். அமெரிக்க வேளாண் துறையின் அறிக்கையின்படி உலக பருத்தி உற்பத்தி 26.5 மில்லியன் டன்களாக இருக்குமெனவும் இதில் சீனாவும் இந்தியாவும் இணைந்து பாதிக்கும் மேலாக பங்களிக்குமென்றும் கணித்துள்ளது.

இந்திய பருத்திகழகத்தின் படி, 2021-22 ஆம் ஆண்டு இந்தியாவில் பருத்தி நுகர்வு 345 இலட்சம் பொதிகள் (1பொதி-170 கிலோ) என கணித்துள்ளது. இது கடந்த ஆண்டு நுகர்வை விட 2.8 சதவீதம் கூடுதலாகும். இந்தியாவில் 2021-22 ஆம் ஆண்டு பருத்தி உற்பத்தி 360 இலட்சம் பொதிகள் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் பருத்தி ஏற்றுமதியானது 2020-21 ஆண்டில் மதிப்பிடப்பட்டுள்ள 78 இலட்சம் பொதிகளை விட இந்த ஆண்டு 48 லட்சம் பொதிகளாக குறைந்துள்ளது. இந்திய பருத்தி கழகம், 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவில் பருத்தி இறக்குமதி 5 இலட்சம் பொதிகள் அதிகரித்து 15 இலட்சம் பொதிகளாக இருக்குமென தெரிவித்துள்ளது. நூற்பாலைகள் மற்றும் வாத்தகர்களிடம் டிசம்பர், 2021 வரையுள்ள மொத்த இருப்பு 113.77 லட்சம் பொதிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து பருத்தி, பங்களாதேஷ், சீனா, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதிக நுகர்வு காரணமாக, உலகெங்கிலும் பருத்தியின் தேவை அதிகரித்தும், குறிப்பாக இந்தியாவில் ஏற்றுமதி அதிகரித்தும் மற்றும் குறைந்தப்பட்ச தொடக்க இருப்பு காரணமாகவும் நவம்பரிலிருந்து பருத்தி விலை ஏறுமுகமாக உள்ளது.

தமிழ்நாடு பருத்தியின் முக்கிய நுகர்வோராக திகிழ்கிறது. 2021-22 ஆம் ஆண்டில் 0.74 இலட்சம் எக்டரில் பருத்தி பயிரிடப்பட்டு 1.61 இலட்சம் பொதிகள் உற்பத்தி செய்யுமெனவும் இது கடந்த ஆண்டைவிட பரப்பளவில் 33 சதவீதமும், உற்பத்தியில் 35 சதவீதமும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கிய இரகங்கள் ஆர்.சி.எச்., சுரபி மற்றும் டி.சி.எச் ஆகியவை ஆகும். பருத்தி ஆலையாளர்கள் தங்களது தேவைக்கேற்ப குஜராத், மகராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து கொள்முதல் செய்கின்றனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பட்டு திட்டத்தின் கீழ் இயங்கிவரும் விலை முன்னறிவிப்பு திட்டம் கடந்த 26 ஆண்டுகளாக கொங்கனாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நிலவிய பருத்தி விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. பொருளாதார ஆய்வின்படி தற்போதைய சந்தை நிலவரம் தொடர்ந்தால் நல்ல தரமான பருத்தி விலை மார்ச் முதல் ஜூன் 2022 வரை குவிண்டாலுக்கு ரூ.7500 முதல் ரூ.8000 வரை இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சந்தை நிலவரங்கள் தொடர்ந்தால் விலை உயர்வுக்கு நல்லவாய்ப்புகள் இருப்பதால் விவசாயிகள் மார்ச் முதல் ஜுன் 2022 மாதத்தில் பருத்தியை சேமித்து விற்பனை செய்யலாம். மாசிப்பட்டத்தில் சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகள் முன்னறிவிக்கப்பட்ட விலையின் அடிப்படையில் விதைப்பு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.