தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புத்தாக்க மற்றும் ஒருங்கிணைப்பு பயிற்சி

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்டமான உன்னத் பாரத் அபியான் 2.0 (UBA 2.0) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மார்ச் 2019 முதல் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வணிக மேம்பாட்டு இயக்ககம் இத்திட்டத்தின் தமிழ்நாட்டின் மத்திய மண்டல ஒருங்கிணைப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்ட கல்லூரிகளுக்கான புத்தாக்க மற்றும் ஒருங்கிணைப்பு பயிற்சி அண்மையில் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் நடத்தப்பட்டது. வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனர் மற்றும் மண்டல பிராந்திய ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் வரவேற்புரை வழங்கினார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக செயல் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் புத்தாக்க மற்றும் ஒருங்கிணைப்பு பயிற்சியை தொடங்கிவைத்து “உயர்கல்வி நிறுவனங்களால் கிராமப்புற வளர்ச்சி” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கனார்.

மேலும் கிராமப்புற வளர்ச்சிக்காக தொழில்நுட்பங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கு குழுக்களாக ஒருங்கிணைவதின் அவசியத்தை அவர் உணர்த்தினார். கிராமப்புற மேம்பாட்டிற்காக விவசாயத்தில் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தனியார் மற்றும் பொது நிறுவனங்களின் கூட்டுமுயற்சியின் தேவையையும் அவர் வலியுறுத்தினார்.

கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழக துணை பேராசிரியர் பாலமுருகன் உன்னத் பாரத் அபியானின் பதிவு, கிராமங்களை தேர்வு செய்தல் மற்றும் ஒப்புதல் பெறுவது குறித்து விளக்கம் அளித்தார். தமிழ்நாடு மத்திய பல்கலைகழகம், திருவாரூர் முதல்வர் வேல்முருகன் திட்டவரைவு தயாரித்தல் குறித்து விளக்கம் அளித்தார். கோவை அமிர்தா பல்கலைகழகம் உதவி பேராசிரியர் கனகராஜ் கிராமங்களில் வளர்ச்சி திட்டத்திற்கான தகவல் சேகரிப்பது குறித்து விளக்கினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பாலாஜி உன்னத் பாரத் அபியானின் நிதயுதவி மற்றும் தனியார் நிதயுதவி கோறுவதின் முக்கியத்துவத்தை விளக்கி கூட்டத்தில் பஙகேற்ற 21 கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றியுரை வழங்கினார்.