உள்ளாட்சி தேர்தலில் எத்தனை பதவிகள்? வாக்காளர்கள் எத்தனை பேர்?

தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நீண்ட இழுபறிக்கு பின் இந்த தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் எத்தனை பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர், எத்தனை அதிகாரிகள், போலீசார் பணியாற்ற உள்ளனர். எத்தனை பதவியிடங்கள் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 12 ஆயிரத்து 832 பதவிகளுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மறைமுக தேர்தலுக்கான பதவிடங்கள்:

மாநகராட்சி மேயர் பதவிடங்கள் 21
மாநகராட்சி துணை மேயர் பதவிடங்கள் 21

நகராட்சி மன்ற தலைவர் பதவிடங்கள் 138
நகராட்சி துணை தலைவர் பதவிடங்கள் 138

பேரூராட்சி மன்ற தலைவர் பதவிடங்கள் 490
பேரூராட்சி மன்ற துணை தலைவர் பதவிடங்கள் 490.

என மொத்தம் 1298 பதவிடங்கள் உள்ளன.

மாநகராட்சிகளில் 1 கோடியே 54 லட்சத்து 84 ஆயிரத்து 607 வாக்காளர்களும், நகராட்சிகளில் 64 லட்சத்து 94 ஆயிரத்து 735 வாக்காளர்களும், பேரூராட்சிகளில் 59 லட்சத்து 79 ஆயிரத்து 412 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.

தமிழக உள்ளாட்சி தேர்தலில் 1.33 லட்சம் அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தலுக்காக 55 ஆயிரத்து 337 கட்டுப்பாடு கருவிகளும், 1 லட்சத்து 6 ஆயிரத்து 121 வாக்குப்பதிவு செய்யும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.