கம்யூனிசம், தனி உடைமை, ஆன்மிகம் சத்குருவின் பார்வை!

கேள்வி:  சத்குரு, தொழில் நிறுவனங்களின் ‘கொள்ளை லாப’ பேராசை பற்றி உங்கள் கருத்து என்ன?

சத்குரு:  சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா தன்னை சோஷலிஸ்ட் (சமூகவுடைமை) நாடாக அறிவித்துக் கொண்டது. சோஷலிஸம் என்பது வீரியம் குறைக்கப்பட்ட கம்யூனிசம் (பொதுவுடைமை) தான். அதாவது முழுமையான கம்யூனிசத்தை பின்பற்ற தைரியம் இல்லாததால், சோஷலிஸக் கொள்கைகளை பின்பற்றுவதாக அறிவித்துக் கொண்டோம். இது தான் நம் நாட்டின் பிரச்சினைகளுக்குக் காரணம். நாம் யார், என்ன வேண்டும், என்ன செய்ய உத்தேசித்திருக்கிறோம் என எதையும் தெளிவாக, தைரியமாக சொல்லமாட்டோம். அது, இது, என்று ஏதேதோ சொல்லி மழுப்புவதால், ஒவ்வொருவரும் நாம் எவ்வழியில் செல்ல திட்டமிடுகிறோம் என்று புரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள்.

கார்ல் மார்க்ஸ்-க்கு பொருளாதாரம் பற்றி நிறைய தெரிந்திருக்கலாம், ஆனால் மனிதர்களைப் பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது என்று தான் சொல்லவேண்டும். தான் வழங்கிய கோட்பாட்டைப் பின்பற்றி உலகின் செல்வச் செழிப்பான நாடுகள் எப்படி கம்யூனிஸ்ட்டாக மாறிவிடும் என்றும் மக்கள் அனைவரும் தங்கள் செல்வங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வார்கள் என்றும், அதன்பின் இவ்வுலகே எப்படி பிரமாதமாக மாறிவிடும் என்றும் அவர் விவரித்திருந்தார். இது ஒரு அற்புதமான கனவு. அதில் சந்தேகம் இல்லை. யோசித்துப் பாருங்கள், உலகில் எல்லோரும் சமமாக இருப்பர். 100 கோடி சம்பாதிப்பவரும், சிறிதும் தயக்கமின்றி அதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வார். கேட்பதற்கு இது நிச்சயம் நன்றாகத் தான் இருக்கிறது! பொதுவுடைமைப் புரட்சி நடந்து முடிந்த ருஷிய நாட்டிற்கு, அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் சென்றிருந்தார். ‘அடடா! செல்வந்தர்கள் எல்லாம் தங்கள் செல்வத்தை எளியோருடன் பகிர்ந்து கொள்ளப்போகும் அற்புதக் காட்சியை காணப் போகிறேன். எல்லோரும் சமம். எல்லோருக்கும் சமவாய்ப்பு. கேட்பதற்கே இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறதே, இதை நேரில் பார்த்தால்ஞ்’ என்று ஆனந்தக் கனவோடு ருஷியாவிற்கு சென்றார் அவர். இவரைப் போலவே இன்னும் பல எழுத்தாளர்களும், புரட்சி சிந்தனையாளர்களும், உலகம் மாறப் போகும் அதிசயத்தை அருகில் இருந்து காண, அமெரிக்காவில் இருந்து ருஷியாவிற்கு பயணம் மேற்கொண்டனர். இப்படி ருஷியாவிற்கு வந்த மார்க் ட்வைன், ருஷியாவின் ஒரு கிராமத்து நெடுஞ்சாலையில் நடந்து கொண்டிருந்தார். அவர் முன்னே ஒரு ருஷியர், இரு கோழிகளை தன் இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு நடந்து கொண்டிருந்தார். வேகமாக நடந்து அவரை எட்டிய மார்க் ட்வைன், அவரருகில் சென்று, ‘தோழரே! நீங்கள் உண்மையிலேயே பொதுவுடைமைவாதியா?’ என்று கேட்டார். அதற்கு அந்த ருஷியர், ‘ஆம். நான் கட்சி உறுப்பினரும் கூட’ என்றார். உடனே மார்க் ட்வைன், ‘உங்களிடம் இரு வீடுகள் இருந்தால், அதில் ஒன்றை சகத்தோழருக்கு கொடுத்துவிடுவீர்களா?’ என்று வினவினார். அதற்கு அந்த ருஷியர், ‘ஆமாம். அதிலென்ன சந்தேகம்? என்னிடம் இரு வீடுகள் இருந்தால், அதில் ஒன்றை என் சகத்தோழருக்கு கொடுப்பேன். நான் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர். அக்கட்சியின் முக்கியப் பணியிலும் இருக்கிறேன்’ என்றார். ‘உங்களிடம் இரு வண்டிகள் இருந்து, இன்னொருவருக்கு வண்டி தேவைப்பட்டால், ஒரு வண்டியை அவருக்குக் கொடுத்து விடுவீர்களா?’. ‘நிச்சயமாக கொடுப்பேன். நான் அக்கட்சி உறுப்பினர் மட்டுமல்ல. எங்கள் கிராமத்தின் தலைவரும் கூட. நான் கொடுக்கத்தான் வேண்டும். கொடுக்கவும் செய்வேன்’. கடைசியாக மார்க் ட்வைன் கேட்டார், “சரி, இப்போது உங்கள் கைகளில் இரு கோழிகள் இருக்கிறதே. அதிலும் ஒன்றை தேவைப்பட்டவர்க்கு கொடுத்துவிடுவீர்களா?”. அதற்கு அந்த ருஷியர் சொன்னார், “என்ன? என்ன முட்டாள்தனம் இது? என்னிடம் இருப்பதே இரு கோழிகள் தான்ஞ்”

எப்போதுமே மக்கள் தங்களிடம் இல்லாதவற்றை பகிர்ந்து கொள்ளவே தயாராக இருக்கின்றனர். பரம ஏழைகள் பொதுவுடைமை பற்றிப் பேச ஆரம்பித்தவுடன், நிலைமை மிக மோசமாக மாறியது. பொதுவுடைமை மிக அற்புதமான எண்ணம் தான். அதை செல்வந்தர்கள் பின்பற்றி இருந்தால், அது ஒரு அழகான சூழ்நிலையை உருவாக்கியிருக்கும். இவ்வுலகில் ஒரு ஆன்மீக சூழலை அது தோற்றுவித்திருக்கும். இவ்வுலகமே ஆசிரமமாக மாறி இருக்கும். ஆனால் உலகின் ஏழைகள்தான் அதை ஆதரிக்கத் துவங்கினர். தங்களால் உழைத்து சம்பாதிக்க முடியாததை, அடித்துப்பிடுங்க அவர்கள் முனைந்தனர். எல்லோருக்கும் சமபங்கு என்னும் போர்வையில் கொள்ளையும், திருட்டும் ஒரு தத்துவமாக ஆதரிக்கப்பட்டன. ஒருவருக்கு ஒருவர் கொடுத்துப் பழகி, பகிர்ந்து, மிக அழகான, அற்புதமான ஒன்றாய் இருந்திருக்க வேண்டியதுஞ் மனித நேயத்தின் இணையில்லா வெளிப்பாடாய் அமைந்திருக்க வேண்டியதுஞ் மிக அசிங்கமான, கொடூரமான ஒன்றாய் உருவெடுத்தது. ஆம், பொதுவுடைமை என்ற பெயரில் மிகமிகக் கொடூரமான செயல்கள் அரங்கேற்றப்பட்டன. ஜோசஃப் ஸ்டாலினின் ஆட்சியில் மட்டுமே சுமார் 3 கோடி ருஷியர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது இரண்டாம் உலகப்போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகம். ஏழைகள், தங்களிடம் இல்லாதவற்றை வன்முறை கொண்டேனும் பகிர்ந்திட நினைத்ததே, இத்தனை ருஷியர்கள் இறப்பதற்குக் காரணமாக அமைந்தது. ஏழைகளுக்கு பதிலாக, செல்வந்தர்கள் பகிர்ந்து கொள்ள முன்வந்திருந்தால், இவ்வுலகே அற்புதமாக மாறியிருந்திருக்கும்.

இது ஒரு மகத்தான எண்ணம். ஆனால் அது எளிதாக, அழகாக செயல்படுவதற்குத் தேவையான அடிப்படைகள் அமைக்கப்படவில்லை. இது வேலை செய்யவேண்டுமெனில், பகிர்தல் என்பது மனிதர்களுக்கு ஒரு இயல்பாகவே இருக்க வேண்டும். அதற்கு இவ்வுலகினரை தியானத்தில் ஈடுபடச் செய்து, இங்கு ஆன்மீகம் மலர வழி செய்திருக்க வேண்டும். அது நடந்திருந்தால், கொடுப்பதும், பகிர்வதும் யாரின் உந்துதலும் இன்றி மிக இயல்பாகவே நடந்திருக்கும். இவ்வுலகும் அழகாக மலர்ந்திருக்கும். நாங்கள் மாணவர்களாக இருந்தபோது, வழக்கத்தில் இருந்த வேடிக்கையான சொல்வழக்கு ஒன்றுஞ் ‘மாணவர்களாய் இருக்கும்போது நாமெல்லாம் கம்யூனிஸ்ட், வேலை கிடைத்தவுடன் சோஷலிஸ்ட், திருமணம் ஆன அடுத்த நொடியிலிருந்து தனிவுடைமை வாதிகள்.’ எனக்கு பதினான்கு வயது ஆகும்போது நக்ஸலிசம் (Naxalism) பற்றி எங்கள் ஆசிரியர்கள் மிக உணர்வுப்பூர்வமாக பேசுவர். அவர்களின் அனல்பறக்கும் பேச்சுக்களால் உந்தப்பட்டு, நாங்கள் எல்லாம் ஆந்திர மாநிலத்தின் வாரங்கல்லுக்கு ஓடிச் சென்று அந்தப் போராளிகளுடன் சேர்ந்து நக்ஸலைட்களாக மாறுவதற்குத் துடித்துக் கொண்டிருந்தோம். என் மிக நெருங்கிய நண்பன் கிளம்பிச் சென்று அவர்களுடன் சேர்ந்தேவிட்டான். சில வருடங்களுக்கு முன்பு கர்நாடகாவில் செயல்பட்டுவந்த ஒரு பெரும் போராளிகளின் கூட்டத்திற்கு தலைவனாக ஆனான். பின்னர், மைசூரில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவன் இறந்தும்விட்டான். அந்த காலகட்டத்தில் ருஷிய இலக்கியங்களை மக்கள் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். தடித்த அட்டைகள் கொண்ட பெரிய புத்தகங்கள் கூட (hard-bound) இரண்டு ரூபாய்க்கு கிடைத்தன. என் வீடு முழுவதையும் ருஷிய இலக்கியத்தால் நிறைத்திருந்தேன். அப்போராளிகளுடன் சேர்ந்துவிட முழு உத்வேகத்தில் இருந்தேன். அந்த சமயத்தில் தான், பொதுவுடைமை பற்றி வீராவேசமாகப் பேசிக் கொண்டிருந்த எனது பேராசிரியரை சந்திக்க, அவ்வப்போது அவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். அவருக்கு இரு குழந்தைகள் இருந்தனர். அதில், அவரது மகன், என் சக மாணவன். என் பேராசிரியருக்கு அவர் மகன் என்றால் கொள்ளைப் பிரியம். அவர்களின் உறவைப் பார்த்த எனக்கு ஒன்று மட்டும் தெளிவாய்ப் புரிந்தது, “அவர் நிச்சயம் பொதுவுடைமை வாதியாக ஆகவே மாட்டார். அவரிடம் எதுவுமே இல்லாததினால் தான் அவர் பொதுவுடைமையை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். சொத்து என்று ஏதேனும் இருந்தால், அதை அவர் நிச்சயம் தன் மகனுக்குத்தான் கொடுப்பார்” என்று. இது எனக்கு மிகத் தெளிவாகவே தெரிந்தது. அந்தத் தந்தை-மகன் உறவைப் பார்த்து, அன்று தெளிந்தது எனக்கு பொதுவுடைமை மோகம். இந்த மனிதர் ஒரு திருதராஷ்ட்டிரர் (துரியோதனின் தந்தை). தன் மகன் என்றால் ஒன்று, மற்றவர்கள் என்றால் வேறொன்று. இவர் எப்போதுமே ஒரு கம்யூனிஸ்ட்டாக அதாவது பொதுவுடைமை வாதியாக ஆகவே முடியாது. ஏனெனில் பொதுவுடைமைவாதி என்றால், தன் சமூகம் முழுவதையுமே தன்னில் ஒன்றாய் பார்ப்பவர் அல்லவா!

அதனால் பொதுவுடைமையை விட்டு, தனியுடைமைக்கு மாறினோம். அது ஏன் தனிவுடைமை என்றழைக்கப்பட்டது? முன்பு தனிப்பட்ட சிலரிடமே செல்வம் குவிந்திருந்ததால் அப்படி அழைத்தார்கள்.

ஆனால் இன்றோ தேவையான நிதி நிறுவனங்கள் வந்துவிட்டன. தொழில் நிறுவனங்கள் தொடங்கத் தேவையான முதலீடு இப்போது பலருக்கும் கிடைக்கிறது. 100 வருடங்களுக்கு முன்பு இது சாத்தியமில்லாத போது, செல்வம் ‘தனிநபர்களின் உடைமை’யாக மட்டுமே இருந்தது. இப்போது இதை ‘சந்தை பொருளாதாரம்’ என்று அழைக்கிறோம், அதாவது சந்தையால் உந்தப்படும் பொருளாதாரம். வணிகம் என்றால் லாபம். லாபம் இல்லாமல், வணிகம் பற்றிப் பேசக்கூடாது. இதுபோன்ற ஒரு அமைப்பை உருவாக்கிவிட்டால், பின்பு, உங்கள் அகராதியில் பேராசை என்று ஒரு வார்த்தை இருக்கக்கூடாது. சந்தைப் பொருளாதாரத்தில் நீங்கள் செயல்படும் போது, ‘பேராசை’ என்ற வார்த்தையை நீங்கள் உபயோகித்தால், நீங்கள் மனதில் பொதுவுடைமைக் கருத்துக்களை சுமந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ‘பொதுவுடைமை வாதியாக’ இருந்தால் மட்டுமே நீங்கள் பேராசை பற்றிப் பேசுவீர்கள். சந்தைப் பொருளாதாரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், பேராசை பற்றி பேசாதீர்கள், சிறந்த சட்டங்கள் குறித்து மட்டும் பேசுங்கள். ஒருவர் 100 கோடி சம்பாதித்தால், அதில் 90 கோடியை வருமான வரியாய்ப் பெறுங்கள், அது எப்படியும் மக்களுக்குத்தான் வினியோகம் ஆகப்போகிறது.

அதே நேரத்தில் அவருடைய உற்சாகம் குறையாதவண்ணம் அவருக்கும் தேவையானதை விட்டுவையுங்கள். இப்படித்தான் தனியுடைமை நிர்வகிக்கப்படுகிறது. இன்று தொழில் நிறுவனங்கள் அரசால் ‘கூட்டாண்மை சமூகப் பொறுப்பில்’ (CSR – Corporate Social Responsibility) அதாவது இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை தொழில் நிறுவனங்களே சமூகத் திட்டங்களுக்கு செலவிடுவது) ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இதற்குப் பதிலாக, அரசுக்குத் தெளிவான சிந்தனை இருப்பின், தக்க செயல்திட்டம் அமல்படுத்தி, தொழில்கள் எந்தவித தடையும் இல்லாமல் விருத்தி அடைய உதவ வேண்டும், அதேநேரத்தில், சமூகத்திற்கும் நல்லது நடக்க வழி செய்ய வேண்டும். சேவை பற்றியோ, பேராசை பற்றியோ பேசவேண்டிய அவசியம் இன்றி, தேவையான தொழில் சட்டங்களை இயற்றியே, இதைச் செய்திடலாம். எல்லோரும் கண்ணியமாய் வாழ்ந்திடலாம். ஆப்பிரிக்க பகுதிகளில், ‘சிங்கம் உண்ணும் போது, மற்ற ஒவ்வொன்றுக்கும் உணவு கிடைக்கும்’ என்ற முதுமொழி உண்டு. நீங்கள் ஒரு சிங்கம் எனில், உங்கள் திறன் மிக அதிகமானது. பேராசை, சேவை, ‘கூட்டாண்மை சமூகப் பொறுப்பு’ பற்றியெல்லாம் பேசுவதற்குப் பதிலாக தேவையான சட்டங்களை இயற்றவேண்டும். அந்த சட்டங்கள் மூலம் ஒருவர் இலாபம் பெறும்போது அவரைச் சுற்றியுள்ளவர்களும் பயன்பெறும்படியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.