ஊடகங்கள் ஒரு மாத்திரை

– மு.வேலாயுதம், நிறுவனர், விஜயா பதிப்பகம்

 

ஊடகங்கள், ஒரு மாத்திரை போன்றது. அவை அவ்வபோது நடக்கும் நிகழ்ச்சிகளை வெளிப்படுத்துமே தவிர, புத்தகங்களைப் போல நிலை பெறாது’’ என்கிறார் கோவை விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் மு.வேலாயுதம்.

1976 ஆம் ஆண்டு கோவைக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றால் அது விஜயா பதிப்பகம்தான். ஆம், மாதம் பிறந்தால் மளிகை சாமான் லிஸ்ட்டுடன் சேர்த்து, புத்தகங்களும் இடம்பெறும் வாசகர்களின் குடும்ப வரவுசெலவுப் பட்டியலில் இப்பதிப்பகத்தின் பெயரும் இருக்கும். அவ்வாறாக புத்தகத்தை மளிகைப் பட்டியலில் சேர்த்த பெருமை விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் மு.வேலாயுதம் அவர்களையே சாரும்.

வாசகர்களையும், சிறந்த மாணவர்களையும் உருவாக்கி, பெருமைக்கே பெருமை சேர்த்து புத்தகங்களையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு, ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் பதிப்பாளர் மு.வேலாயுதம் நம்முடன் பகிர்ந்து கொண்ட அவரது வாழ்க்கை அனுபவங்களைப் பற்றிகாண்போம்.

‘‘1941 ஆம் ஆண்டு மதுரை மேலூரை அடுத்த உலகநாதபுரத்தில் பிறந்து வளர்ந்தேன். எட்டாம் வகுப்பு வரை படித்த எனக்கு ஒன்பதாம் வகுப்பு எட்டாக் கனியாகிவிட்டது. என்னுடைய பதினாறாவது வயதில் கோவைக்கு வந்தேன். பதினெட்டு ஆண்டுகள் பல இடங்களில் சம்பளத்துக்காக வேலை பார்த்தேன்.

வாசிக்கும் ஆர்வம் என்னுள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஒருமுறை கோவை சுக்ரவார்பேட்டையில் உள்ள அரசு நூலகத்திற்குச்சென்றேன். அப்பொழுது அங்குகூடி இருந்தவர்கள், இவன் எங்கே படிக்கப் போகிறான் என்று என்னைப் புறக்கணித்தனர். அப்பொழுது அங்கு நூலகராக இருந்த சரஸ்வதி அவர்கள் என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து அங்கே என்னை வாசகராக சேர்த்துக் கொண்டார்.

இதையடுத்து, புத்தகங்களுக்கும் எனக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கே சென்று புத்தகங்களை வாசிப்பேன். அதன் உந்துதலே 1976ல் பதிப்பகத்தையும், பல்பொருள் அங்காடியையும் துவங்கினேன்.

அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட இக்காலத்தில் மக்களிடம் வாசிப்பு பழக்கம் இருக்கிறதா?

என்னைப் பொறுத்த வரையில் ஊடகங்கள் மாத்திரை போன்றது. அவை அவ்வபோது நடக்கும் நிகழ்ச்சிகளை வெளிப்படுத்துமே தவிர, புத்தகங்களைப் போல நிலைப்பெற்று இருக்காது. அதனால்தான் வாசகர்களும், எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், கொங்கு மண்டலத்தில் குற்றங்கள் குறைவாக இருப்பதற்கு இங்கிருக்கும் பெரும்பாலான மக்களிடையே வாசிப்பு பழக்கம் அதிகம் காணப்படுவதால்தான். ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் வாசிக்கும் பழக்கம் அதிகம். கல்வி என்பது வெறும் பாடப் புத்தகத்தில் இல்லை. நம்முடைய பாடப்புத்தகத்தில் கற்பனை சக்தி (கிரியேட்டிவிட்டி) கிடையாது. கல்வித் துறையை விமர்சிக்க நமக்குத் தகுதி இல்லை. ஆனால் உண்மை அதுதான்.

கல்வி மட்டும் அல்ல. தற்போதைய சூழ்நிலையில் அனைத்துத் துறை சார்ந்த தேடுதலுக்கான விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும். சிறு வயதிலிருந்தே வாசிப்பு பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திருந்தால், இன்று நீட் போன்ற பல்வேறு தேர்வுகளில் அவர்கள் நிச்சயம் வெற்றிக்கொடி நாட்டியிருப்பார்கள்.

டிஜிட்டல் என்பது தகவலை மட்டும் கொடுக்கக் கூடியது. ஆனால், சாதிக்க வேண்டும் என்றால் மனித சக்தியினால் மட்டுமே முடியும். ஆகவே வாசிப்பு பழக்கத்தை சிறு வயது முதலே குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.

கணினியின் வளர்ச்சியினால் கலாச்சாரம், பண்பாடு வீழ்ச்சியடைந்துள்ளது. முதியோர் இல்லங்கள் அதிகரித்துள்ளன. தற்போதைய கல்வியினால் இளைஞர்களிடம் கலாச்சாரம் மாறியுள்ளது. இப்பொழுது உள்ள கல்வி, பண்பாடு, கலாச்சாரத்தை நமது இளைஞர்களிடம் கொடுப்பதில்லை. கலாச்சாரம், மாணவர்களிடையே உள்ள இந்த இடைவெளியை சரி செய்ய வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

நூலகங்கள் பெருகிடவும், மாணவர்களிடையே வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வழிகள்?

நான் பதிப்பகம் ஆரம்பித்த காலத்தில் வாசிப்பவர்கள் மிகவும் குறைவு. ஒருவர் புத்தகம் வாங்கினால், அவரிடமிருந்து பலரும் வாங்கிப் படிப்பார்கள். பின்னர் கற்கும் திறனும் பள்ளிக்கூடங்களும் முன்னேற புத்தகங்களும் பெருகின. புத்தக சாலைகளும் பெருகின.

அத்துடன், எனது பதிப்பகத்திற்கு புத்தகம் வாங்க வரும் வாசிப்பாளர்களிடம் நான் கலந்துரையாடுவேன். அவ்வாறு செய்யும்போது, எங்களுக்குள் பல்வேறு தகவல்கள் பரிமாறப்படுகின்றன. அறிவுத்திறனும் விரிவடைகிறது. எனவே, அரசு மற்றும் அரசு சாரா நூலகங்களில் உள்ள நூலகர், வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் புத்தகம் பற்றி கலந்துரையாட வேண்டும். அவ்வாறு செய்தோம் என்றால், மாணவர்களிடையே ஆர்வம், வாசிப்புத் திறன் மேலோங்கும். ஏனென்றால், ஒரு கிராமத்தின் கல்வி நிலையை அறிய, அங்குள்ள நூலகம் எத்தனை என்று எண்ணினால் தெரிந்து கொள்ளலாம் என்பார்கள். ஆகவே, நல்ல சமூகத்தை உருவாக்குவதில் நூலகர்களுக்கும் ஒரு பங்கு உண்டு.

அதேபோல் பெற்றோர் தங்கள் குழந்தைகள் கேட்கும் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். ஆனால் பாடப்புத்தகங்களே போதுமானது என்று நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. சிறுவயதில் என்னுடயை வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டியது சிறுகதைகள்தான். எனவே குழந்தைகளுக்கு சிறுகதைகள், புதிய புதிய நூல்களை வாசிக்க பயிற்சி கொடுங்கள்.

வளரும் இளம் எழுத்தாளர்களிடம் இருந்து எத்தகைய கதை வரவேற்கப்படுகிறது?

சமூக மாற்றங்களை நிகழ்த்தக் கூடிய, சமூகத்தில் நடக்கின்ற அவலங்களை சுட்டிக்காட்டக்கூடிய படைப்புகளை உருவாக்க வேண்டும். அதேநேரம் ஒரு படைப்பாளியால், சமூகத்தின் எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது. ஆனால், அந்த பிரச்னையால் ஏற்படும் பிரதிபலிப்புகளை படைப்பாக்கும்போது அது சமூகத்தினரை சிந்திக்க வைக்கும். வாசிப்பவர்களை யோசிக்க வைக்க வேண்டும். வெறும் கற்பனைக் கதைகளினால் யாதொரு பயனுமில்லை. சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய படைப்புகள் இன்றைய சூழ்நிலையில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள்?

டாக்டர் மு.வரதராஜன், ந.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன், பொன்னுசாமி, கந்தர்வன் போன்றவர்களின் படைப்புகள் என்றும் நினைவில் இருந்து அகலாதவை.

பிடித்த படைப்புகள்?

அவை காலத்திற்கு காலம் மாறுபடுகிறது. என்னை புரட்டிப் போட்ட புத்தகம் என்றால் தோழர் தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரம், கம்பிக்குள் வெளிச்சம்.

விஜயா பதிப்பகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்?

தமிழ்நாடு அரசின் சிறந்த பதிப்பாளர் விருதினை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் பெற்றது. ஒருமுறை, டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்னர¢ அவர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார். அதன் முதல் பதிப்பு என்னிடம் வழங்கப்பட்டது. அப்பொழுது அவர் என்னிடம், ஒரு 20,000 பதிப்புகள் விற்பனை செய்து விடுவீர்களா என்று கேட்டார். நான் ஒன்றும் பேசாமல் புன்னகைத்தேன்.

அந்த படைப்பு ஓரிரு ஆண்டுகளில் விற்பனையில் ஒரு இலட்சத்தைத் தாண்டி, அதற்குரிய பாராட்டுகளும் கிடைத்தன. அதனைக் கண்ட டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் ‘உங்களைத் தவறாக நினைத்து விட்டேன். மன்னித்து விடுங்கள். உங்களது இந்த அற்புதப் பணி மேலும் தொடர வேண்டும்’ என்று வாழ்த்தினார். அதுவே விஜயா பதிப்பகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான்’ என்றார் தன்னடக்கத்துடன்.

இவர் போன்ற சமூக அக்கறை கொண்ட பதிப்பகத்தாரர்கள் இருப்பதனால்தான், நல்லதொரு படைப்புகளும் படைப்பாளிகளும் இன்றைய, நாளைய சமூகத்திற்குக் கிடைக்கின்றனர். இவரது பதிப்பக பணி சிறக்க எமது வாசகர்களாகிய உங்களின் பாராட்டுதல்களையும் எங்களது வாழ்த்துகளையும் தெரிவிக்கிறோம்.