கே.எம்.சி.எச் மருத்துவமனையில் கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக புகையிலை ஒழிப்பு தினத்தன்று, புகையிலை பயன்பாட்டின் கெடுதல்கள் பற்றியும், அதனை தடை செய்ய வேண்டிய முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு ‘ஆரோக்கியத்தை தேர்ந்தெடுப்போம் புகையிலையை கைவிடுவோம்’ என்ற கையெழுத்து விழிப்புணர்வு  நிகழ்ச்சி கோவை  கே.எம்.சி.எச் மருத்துவமனையில் இன்று (31.05.2018) நடைபெற்றது. பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து புகையிலையின் கெடுதல்களை மக்களிடம் கொண்டு செல்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும்.

நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் குழந்தை பேறின்மை ஆகியவற்றிற்கு புகையிலை பயன்பாடு ஓர் முக்கிய காரணமாக இருக்கிறது. உலக அளவில் மக்களிடம் புகையிலையின் கெடுதல்களை குறித்தும் அதனை முழுமையாக நிறுத்திவிடுவதை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை ஊக்குவிப்பதும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு முயற்சி ஆகும்.

கோவை ரயில் நிலைய இயக்குனர் சதீஷ் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி மற்றும் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் அருண் N பழனிசாமி மற்றும் மருத்துவ ஊழியர்கள் முன்னிலையில் இந்நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

இதி 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகையிலையை எந்த ரூபத்திலும் பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி கூறி கையெழுத்திட்டனர். இந்த இயக்கத்தின் ஓர் அங்கமாக 10000 புகையிலை விழிப்புணர்வு செய்தி மடல்கள் மக்களிடையே விநியோகிக்கப்பட்டன.

இதில் பேசிய தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, “இது போன்ற தொடர் முயற்சிகளின் மூலம் புகையிலை பயன்பாட்டை முழுமையாக தடை செய்வதில் கே.எம்.சி.எச் பெரும் பங்காற்றும். மேலும், இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள்” என்றார்.

இவ்விழாவில், ரயில்வே ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பொது மக்கள் ஆகியோரும் பெருமளவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.