ஆனைக்கட்டி அருகே ஜம்புகண்டியைச் சேர்ந்த ஓட்டுநருக்கு ஷேர் ஆட்டோ வழங்கல்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் காட்டன் சிட்டி சார்பில், ஆனைக்கட்டி அருகேயுள்ள ஜம்புகண்டியைச் சேர்ந்த பழங்குடி ஓட்டுநருக்கு ஷேர் ஆட்டோ இலவசமாக வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே உள்ளது, ஜம்புகண்டி பழங்குடியின மலை கிராமம். இக்கிராமத்தை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் தத்தெடுத்து, பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் வெள்ளிங்கிரி என்ற ஓட்டுநர், கொரோனா பெருந்தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் வறுமையில் வாடியது தெரியவந்தது.

இதையடுத்து கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் காட்டன் சிட்டியுடன் இணைந்து ஷேர் ஆட்டோ ஒன்றை அவருக்கு வழங்க திட்டமிட்டது.

இதன்படி ரோட்டரி கிளப் ஆஃப் காட்டன் சிட்டி தலைவர் அஜய்குப்தா, கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன் ஆகியோர், ஓட்டுநர் வெள்ளிங்கிரியிடம் சாவியை வழங்கி, ஷேர் ஆட்டோவை ஒப்படைத்தனர்.

இதன்மூலம் வெள்ளிங்கிரி குடும்பத்தினர் மட்டுமின்றி போக்குவரத்து வசதி குறைவாக உள்ள அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்களும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து பயனடைவர்.