பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 4ஜி, 5ஜி சேவை வழங்க கோரி போராட்டம்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு செல்பி எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி அலைக்கற்றை அனுமதி வழங்கிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக செல்பி எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு இதுவரை 4ஜிக்கான தொழில்நுட்ப உதவியும், நிதிஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. அதேபோல 5ஜி அனுமதி தற்போது பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்-க்கு 5ஜிஅனுமதியும் வழங்கப்படவில்லை. அரசுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் புறக்கணிக்கும் விதமாகவும், நலிவடைய செய்யும் நோக்கத்தோடும் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.

தற்போது கொரானா தொற்றின் மூன்றாவது அலை துவங்கியுள்ள காரணத்தால் பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலமான வகுப்புகள் தொடங்கியுள்ளன. இந்தசூழலில் ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து வருகின்ற நேரத்தில் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் கடுமையான கட்டண உயர்வை செய்துள்ளன.

ஏற்கனவே, பெரும் தொற்றின் காரணமாக வழக்கமான வருமானத்தை இழந்துள்ள மக்கள், தற்போது இணைய தொடர்புக்காக அதிக செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பி.எஸ்.என்.எல் நிறுவனம் குறைவான கட்டணங்களுடன் சேவையாற்றி வருகின்றது.

எனவே, ஒன்றிய அரசு பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி அலைக்கற்றை உரிமையையும் அதை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகளையும் நிதியையும் உடனடியாக வழங்க வேண்டும். தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வை குறைத்திட அரசு தலையிட வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்திற்கு பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர்கள், ஒப்பந்த பணியாளர்கள், ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.