கொரோனா கட்டுபாடு காரணமாக பக்தர்களின்றி மருதமலையில் தைப்பூசம்

கொரோனா பரவல் காரணமாக மருதமலை கோவிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பால் தைப்பூச தினமான இன்று கோவை மருதமலை முருகன் சன்னிதானம் களையிழந்து காணப்பட்டது.

முருகனை வழிபட தை மாதம் சிறந்த மாதமாக உள்ளது. இந்த மாதத்தில் வரும் தைப்பூச தினத்தில் பாதயாத்திரை சென்று முருகனை வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தைப்பூச நாளில் தமிழகமெங்கும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்,

அதேபோல், கோவை மருதமலை கோவிலிலும் தைப்பூச தினத்தில் முருகனுக்கு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று மருதமலை முருகனுக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க, சிறப்பு பூஜைகளோடு வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மேலும், சப்பரத்தில் வைத்து முருகன் வள்ளி, தெய்வானையை மலைக்கோவிலை சுற்றி வந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு முருகனை வணங்க பாதயாத்திரையாக வந்த பக்தர்களுக்கு மலை அடிவாரத்திலேயே அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை கோவில் அடிவாரத்திலேயே நிறைவேற்றிச் சென்றனர். தைப்பூச நாளில் மருதமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மலை அடிவாரத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.