பழநிக்கு பாதயாத்திரை செல்வோருக்கு உணவு வழங்கிய இஸ்லாமியர்கள்

தைப்பூசத்திற்காக பழநிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு கோவையில் இஸ்லாமியர்கள் உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது தைப்பூசம் தான். இந்த மாதத்தில் முருகனுக்கு விரதமிருந்து பாதயாத்திரை சென்று வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

அதன்படி, தைப்பூசத்திற்காக கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கோவையில் இருந்து பழநிக்கு நேற்று பாதயாத்திரையாக புறப்பட்ட பக்தர்களுக்கு உக்கடம் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் உணவு, தண்ணீர் பிஸ்கட் மற்றும் முகக்கவசங்கள் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சாதிக் கூறுகையில், “கடந்த 3 ஆண்டுகளாக பழநிக்கு பாத யாத்திரை செல்வோருக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை நாங்கள் வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு 500 பேருக்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நாங்கள் பணியை மேற்கொண்டு வருகிறோம்.” என்றார்.