சிசிடிவி கேம்ரா பொருத்தாத கடைகளுக்கு நோட்டீஸ்

கோவையில் சிசிடிவி கேமரா பொருத்தாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய மாநகராட்சிக்குப் பரிந்துரைக்கப்படும் என காவல் துறையினர் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடைகள், அலுவலகம், வணிக வளாகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு கடை, அலுவலகம் உட்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாத நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று கோவை மாநகர காவல் துறையினர் வெரைட்டிஹால் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தாத கடை, அலுவலகங்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

அரசு உத்தரவுப் படி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை எனில் கடைகளில் உரிமத்தை ரத்து செய்ய மாநகராட்சிக்குப் பரிந்துரைக்கப்படும் என அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிசிடிவி கேமராக்களை விரைவாகக் கடையில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோவை மாநகர காவல் துறையினர் கடைகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.