வீட்டுமனைகளை பதிவு செய்ய எளிய முறை: முதலமைச்சருக்கு ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நன்றி

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் DTCP வீட்டுமனைகளை பதிவு செய்ய எளிய முறையில் பெறும் வகையில் உத்தரவினை பிறப்பித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் – தேசியத் தலைவர் ஹென்றி, தேசிய அமைப்பு செயலாளர் நேரு நகர் நந்து, தேசிய துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர்கள், தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மனை வரன்முறை சட்டத்தின் கீழ் DTCP/CMDA அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளை, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் (RERA) பதிவு செய்து உத்தரவு பெறாமல், பதிவு அலுவலகங்களில் ஆவணங்களை பதிவு செய்ய கடந்த 17/12/2021 முதல் தடை ஏற்பட்டது.

இதனால் பொதுமக்களும் மனை வணிகம், கட்டுமானம், உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்களும் வணிக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இந்தப் பிரச்சினையை FAIRA சார்பில் அதன் நிறுவனர் – தேசியத் தலைவர், ஹென்றி, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று எளிய முறையில் RERA வில் பதிவு செய்யும் வகையில் பரிந்துரைத்தனின் அடிப்படையில்,

அரசு மேற்கண்ட திட்டங்களை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் மிகவும் எளிமையாக பதிவு செய்து, (அதாவது RERA வில் திட்டங்களை பதிவு செய்ய படிவம் A & B, தற்போதைய உரிமையாளர் பெயரிலுள்ள ஆவணம், பட்டா, வில்லங்க சான்றிதழ், டிடிசிபி அங்கீகாரம் பெற்ற உத்தரவின் நகல் போன்ற ஆவணங்களின் அடிப்படையில், ESCROW வங்கி கணக்கு ஏதுமின்றி) RERA உத்தரவு பெறும் வகையிலும் வழிவகை செய்து அதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளது.

மேற்கண்ட பிரச்சனைக்கு விரைவாக தகுந்த தீர்வினை ஏற்படுத்தி தந்தமைக்கு மாண்புமிகு தமிழகத்தின் முதல்வர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, TNRERA சேர்மன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் FAIRA சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக FAIRA அமைப்பினர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.