பஞ்சாப் அரசை கண்டித்து கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அம்மாநில அரசு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க கடந்த வாரம் பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, சாலை மறியல் போராட்டம் காரணமாக மேம்பாலம் ஒன்றில் காத்திருக்க நேரிட்டது. இதனால் தனது பயணத்தை அவர் பாதியிலேயே முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு பஞ்சாப் மாநிலத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

பிரதமர் வருகையை முன்னிட்டு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது என்று பஞ்சாப் மாநில அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பாதுகாப்பு குறைபாடு இருந்தது என்று கூறி அம்மாநில அரசை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், கோவை மாநகர் மாவட்ட பாஜக பட்டியல் அணியின் சார்பில் வடகோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பா.ஜ.க பட்டியல் அணி மாவட்ட தலைவர் ஜெ.சி.விவேக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளர் முத்துகுமார், மாவட்ட செயற்குழு சிறப்பு அழைப்பாளர் கரிகாலன், பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் முருகேசன் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பஞ்சாப் மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.